இலங்கை கிரிக்கட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- அணிக்கு திரும்பும் 3 பிரபலங்கள்…!

மெண்டிஸ், குணத்திலக்க, டிக்வெல்ல மீதான போட்டித்தடை நீக்கம்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தேசிய கிரிக்கெட் அணி வீரர்களான தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகிய வீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போட்டித்தடையினை நீக்கவிருப்பதாக அறியக்கிடைத்திருக்கின்றது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணியில் காணப்பட்டிருந்த தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகிய மூன்று வீரர்களுக்கும் அங்கே உயிர்ப்பாதுகாப்பு விதிமுறைகளை மீறியிருந்த குற்றச்சாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் இந்த (2022) ஆண்டின் ஜூன் மாதம் வரை செல்லுபடியாகுமாறு இருந்த இந்த தடைக்காலத்தினை உடனடியாக அமுலுக்கு வரையில் நீக்க இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகம் தீர்மானம் மேற்கொண்டிருப்பதாக நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் தடைக்காலத்தினைப் பெற்றிருக்கும் வீரர்கள் மூவரும் உடற்தகுதிப் பரிசோதனைகளுக்கு முகம் கொடுத்து அதில் தேர்ச்சியடையும் பட்சத்தில் அவர்களுக்கு, இம்மாத நடுப்பகுதியில் ஜிம்பாப்வே அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் பங்கெடுக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதேவேளை இந்த மூன்று வீரர்களுக்குமான உள்ளூர் போட்டிகளுக்கான தடை ஏற்கனவே நீக்கப்பட்டிருந்த நிலையில இந்த மூன்று வீரர்களும்,
லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது பருவகாலத்திற்கான போட்டிகளில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#Abdh