இலங்கை கிரிக்கெட்டில் என்னதான் நடக்கிறது- முன்னாள் வீரர்கள் பலர் கேள்வி ..?
பல முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் தற்போதைய இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக், இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இலங்கை அணியின் அவலநிலை குறித்து சமூக ஊடகங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
“இலங்கை தரவரிசைகளில் டெஸ்ட் மற்றும் T20 கிரிக்கெட் போட்டிகளில் 8 வது இடத்திலும் , ஒருநாள் கிரிக்கெட்டில் 9 வது இடத்திலும் காணப்படுகின்றது.
ஏராளமான சாதனைக்கதைகளை உருவாக்கிய ஒரு தேசம் மீண்டும் ஒருங்கிணைந்து முன்னோக்கித் திட்டத்தில் தெளிவு பெற வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் கூறினார்.
“அரவிந்தா, அர்ஜுனா, வாஸ், முரளி, மஹேல, குமார் சங்ககாரா என்று ஏராளமான தரமான கிரிக்கெட் வீரர்கள் இருந்தார்கள், ஸ்ரீ இலங்கை கிரிக்கெட்டுக்கு என்ன நேர்ந்தது என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ட்வீட் செய்துள்ளார்.
இதற்கிடையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில், இந்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராக போராடும் நிலை இலங்கை துடுப்பாட்ட வீரர்களின் தங்கள் உள்நாட்டு போட்டியின் விளைவாகவே இருக்க வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட் தரமின்றி இருப்பதே அதற்கான காரணமாகும் என்று தெரிவித்தார்.
ஒரு நல்ல உள்நாட்டு போட்டியைக் கொண்டிருக்கும் வரை, இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெறுவது எளிதல்ல என்று தினேஷ் கார்த்திக் ஸ்கை ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.
தற்போது நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் இலங்கை மூன்று T20 போட்டிகளையும், முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளையும் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.