இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய துடுப்பாட்ட பயிற்சியாளர் நியமனம்…!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய துடுப்பாட்ட பயிற்சியாளர் நியமனம்…!

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் ஃப்ளவர் கோவிட் -19 க்கு இலக்கானதை அடுத்து, தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவிக்கு தற்காலிகமாக இலங்கை கிரிக்கெட் ஒருவரை நியமித்துள்ளது.

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தலைமை பயிற்சியாளராக முன்னர் செயல்பட்ட தம்மிக்க சுதர்ஷன, தேசிய அணியுடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

தம்மிக்கா சுதர்ஷன ஏற்கனவே இலங்கையின் இள ரத்தங்களான வனிந்து ஹசரங்க, தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்க உள்ளிட்ட பல தேசிய கிரிக்கெட் வீரர்களுடன் காலி, ரிச்மன்ட் கல்லூரியின் பயிற்சியாளராக பணியாற்றியிருந்தார்.

சுதர்ஷன, வலதுகை துடுப்பாட்ட வீரராக முதல் தர கிரிக்கெட்டை விளையாடியவர், இலங்கை ‘A’ அணியில் திலான் சமரவீர தலைமையிலான இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். குமார் சங்கக்கார, இயன் டேனியல், மைக்கேல் வான் டார்ட், அவிஷ்கா குணவர்தன, சாமரா சில்வா, இந்திகா டி சரம் மற்றும் திலகரத்ன தில்ஷன் ஆகியோரோடும் இவர் கிரிக்கெட் விளையாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிராண்ட் ஃப்ளவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவுக்கு வரும் நிலையில் விரைவில் நிரந்தரமாக புதிய துடுப்பாட்ட பயிற்சியாளரை நியமிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நடவடிக்கைகளையும் எடுத்துள்ள நிலையிலேயே இவரது தற்காலிக நியமனம் அமைந்துள்ளது.