இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் யார் ? மூன்று இலங்கையர்கள் இடையில் கடுமையான போட்டி ..!

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் யார் ? மூன்று இலங்கையர்கள் இடையில் கடுமையான போட்டி ..!

இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்த துடுப்பாட்ட பயிற்சியாளராக வருவதற்கான வாய்ப்பு யாருக்கு இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் .

தற்போதைய துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரான்ட் பிளவரின் பதவிக்காலம் நிறைவுக்கு வரும் நிலையில், அவருடைய பதவிக் காலத்தை நீடிப்பதற்கான விருப்ப நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இல்லை என தெரியவருகின்றது.

ஆகவே அவரது ஒப்பந்த நிறைவு காலத்துக்கு முன்னதாகவே புதிய ஒருவரை நியமிப்பதற்கான முனைப்புக்கள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

இந்திய தொடரின்போது தற்காலிக துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட தம்மிக சுதர்சன அந்த பதவியில் தொடர வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

காலி ரிச்மண்ட் கல்லூரியின் முன்னாள் பயிற்சியாளர் சுதர்சன, தன்னுடைய பொறுப்பை இந்திய தொடரில் மிகச்சிறப்பாக செய்திருக்கும் நிலையில், அவர் அந்தப் பணியில் தொடர வாய்ப்பிருக்கிறது.

சரித் அசலங்க, வணிந்து ஹசரங்க, கமிந்து மென்டிஸ், தன்ஞ்சய லக்‌ஷான் உள்ளிட்ட பல வீரர்களது பயிற்சியாளராக ரிச்மண்ட் கல்லூரியில் பணியாற்றியவர் சுதர்சன என்பதும் சிறப்புக்குரியதே.

இது மாத்திரமல்லாமல் இலங்கை A அணியின் பயிற்சியாளராக இருந்த அவிஷ்க குணவர்தனவும் இந்த பதவிக்கான போட்டி நிலையில் இருப்பதாக அறியப்படுகிறது.

அத்தோடு முன்னாள் இலங்கை வீரர் நவீட் நவாஷும் இந்த பதவிக்கு போட்டியில் இருக்கின்றார், 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தை 2020 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு வென்று கொடுத்த பெருமைக்குரியவர் நவீட் நவாஸ்.

அவருடைய பயிற்றுவிப்பில் பங்களாதேஷ் அணி U19 உலகக் கிண்ணத்தில் இந்தியாவை தோற்கடித்து கிண்ணத்தை சுவீகரித்தது.

ஆயினும் இலங்கை கிரிக்கட் தரப்பில் நவீட் நவாஷை இணைத்துக்கொள்வதற்கு வீரர்கள் தரப்பில் எதிர்ப்புக்கள் இருப்பதாக அறிய வருகிறது.

ஆகவே இந்த பதவிக்கு தம்மிக சுதர்சன நியமிக்கப்பட பெரும்பாலான வாய்ப்புகள் இருப்பதாக நம்ப்ப்படுகின்றது.