இளையோர் உலகக்கிண்ணம் -24 ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து ..!
மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் இளையோருக்கான 19 வயதிற்குட்பட்ட உலககிண்ண போட்டிகளுக்கான இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
16 அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் தொடரின் அடிப்படையில் இங்கிலாந்து ,ஆப்கானிஸ்தான், இந்திய அவுஸ்திரேலிய அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகின.
நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, 232 எனும் இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி இறுதி 5 ஓவர்களில் வெற்றிக்கு 31ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் துடுப்பெடுத்தாடியது,பின்னர் 12 பந்துகளில் 19 ஓட்டங்கள் தேவை ஆயினும் 49 வது ஓவரை வீசிய சுழல்பந்து வீச்சாளர் ரீஹான் மொஹமட்டின் அற்புதமான ஓவரில் 3 விக்கட்டுக்கள் வீழ்த்தப்பட போட்டியில் திருப்பம் ஏற்பட்டது.
இதனடிப்படையில் இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களை மட்டுமே பெற்று ஆப்கானிஸ்தான் 15 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
பரபரப்புக்குப் பஞ்சமில்லாத இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இங்கிலாந்து அணி 1998ஆம் ஆண்டு பின்னர் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் இளையோர் உலகக்கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது .
ஆடவர் உலகக் கிண்ணப் போட்டிகளிலும் கூட இங்கிலாந்து 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது, இந்த நிலையில் இங்கிலாந்து இளையோர் இன்னுமொரு உலகக்கிண்ணத்தை குறி வைத்து காத்திருக்கின்றனர்.
இன்று இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய, அவுஸ்ரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன, இன்று வெற்றி பெறும் அணி வரும் 5 ஆம் திகதி இங்கிலாந்தை இறுதிப்போட்டியில் சந்திக்கும்.