உலகக்கோப்பை கிரிக்கெட் : அரையிறுதி சுற்றுக்குள் நுழைய போராடும் 6 அணிகள்..!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்றுக்குள் நுழைவதற்கு இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவை தவிர்த்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்  உள்ளிட்ட 6 அணிகள் போராடி வருகின்றன.

நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணி அரை இறுதி சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது. இதே போன்று தென் ஆப்பிரிக்கா அணியும் அரை இறுதி சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாபிரிக்க அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதனை தவிர்த்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் அரையிறுதி சுற்றில் நுழைவதற்கு போராடி வருகின்றன. இது பற்றிய விவரத்தை பார்க்கலாம்.

ஆஸ்திரேலிய அணி – பாயிண்ட்ஸ் டேபிளில் 3ஆம் இடத்தில் உள்ளது. இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்று 10 புள்ளிகளை ஆஸ்திரேலிய அணி பெற்று இருக்கிறது. அடுத்ததாக ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணியை ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளில் ஒன்றை வீழ்த்தினாலும் கூட அரை இறுதிக்கு ஆஸ்திரேலியா முன்னேறிவிடும். இரண்டிலும் தோல்வி அடைந்தால் அரையிறுதி சுற்றில் நுழைவதற்கான வாய்ப்புகள் குறையக்கூடும்.

நியூசிலாந்து – தற்போது 4-ஆம் இடத்தில் உள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இதில் கட்டாய வெற்றியை நியூசிலாந்து பெற வேண்டும். மேலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அடுத்த இரு போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும். இவை நடந்தால் நியூசிலாந்து அரை இறுதிக்கு முன்னேறலாம்.

பாகிஸ்தான் – 5ஆம் இடத்தில் உள்ள பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை உருவாகியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் கட்டாய வெற்றி பெற வேண்டும். அதுவும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் இந்த வெற்றி இருக்க வேண்டும். ஒருவேளை இந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்று விட்டால் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளின் போட்டி முடிவுக்கு காத்திருக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தான் – 6ஆம் இடத்தில் உள்ள இந்த அணி இன்னும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் விளையாட வேண்டியுள்ளது. இவ்விரு அணிகளும் வலிமைமிக்க அணி என்பதால் வெற்றி வாய்ப்புகள் குறைவு என்றே கூறலாம். இவ்விரு போட்டிகளில் ஒன்றில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளின் ரிசல்ட்டிற்காக காத்திருக்க வேண்டும்.

இலங்கை அணி – 4 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் மோத வேண்டும். அரை இறுதிக்கு இலங்கை தகுதி பெற 2 போட்டிகளிலும் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும் கூட இலங்கை அணி வெளியேற நேரிடும்.

நெதர்லாந்து – 4 புள்ளிகளை கொண்டுள்ள நெதர்லாந்து அணியும் இலங்கையின் நிலைமையில் தான் உள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக அடுத்த 2 போட்டிகளில் நெதர்லாந்து அணி விளையாடுகிறது. 6 அணிகள் அருவி சுற்றுக்காக போட்டியில் இருந்தாலும் ஆஸ்திரேலியா அணி ஏறக்குறைய அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகள் தொடரிலிருந்து வெளியேறயுள்ளன.

✍️ C G Prashanthan

 

 

Previous articleICC Worldcup- ஆரம்பம் முதலே சொதப்ப ஆரம்பித்திருக்கும் ஆஸி….!
Next articleICC உலக கிண்ணம் 2023- அரையிறுதி அணிகள் உறுதியாகின..!