உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. அனிமல் பட தயாரிப்பாளர் அறிவிப்பு
உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரைப்படமாக வெளியாக உள்ளது. பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான டி சீரிஸ்-இன் உரிமையாளரும், பாலிவுட் தயாரிப்பாளருமான பூஷன் குமாருடன், துணை தயாரிப்பாளராக ரவி பாக்சந்த்கா இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. அவர்கள் இருவரது வாழ்க்கையை காட்டிலும் யுவராஜ் சிங்கின் கதை உணர்ச்சிபூர்வமாக இருக்கும் என்பதாலும், இந்திய அணி இரண்டு உலகக்கோப்பைகளை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் என்ற காரணத்தாலும் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் எழுந்துள்ளது.
மிக இளம் வயதிலேயே யுவராஜ் சிங் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். நாட்வெஸ்ட் தொடர் வெற்றி, 2007 டி20 உலகக் கோப்பையில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தது, 2011 உலகக்கோப்பையில் உடல்நலக் குறைவுக்கு நடுவே தன் வாழ்வின் சிறந்த ஆல் ரவுண்டர் செயல்பாட்டை வெளிப்படுத்தி உலகக்கோப்பை வென்று கொடுத்தது, புற்றுநோயுடன் போராடி மீண்டு வந்தது என அவரது வாழ்க்கை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுடன் நெருக்கமான இடத்தில் இருக்கிறது.
இந்த சம்பவங்களை எல்லாம் திரைப்படமாக பார்த்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் இப்போதே குதூகலிக்கத் துவங்கி உள்ளனர். யுவராஜ் சிங்கின் நண்பரும், சச்சின் தி பில்லியன் டிரீம்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளருமான ரவி பாக்சந்த்கா இந்த திரைப்படத்துக்காக யுவராஜ் சிங்கை ஒப்புக் கொள்ள வைத்ததாக கூறப்படுகிறது. ரவி பாக்சந்த்கா இந்த திரைப்படத்தின் துணை தயாரிப்பாளராக இருப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அனிமல், ஸ்ரீகாந்த், த்ரிஷ்யம் 2, கபீர் சிங் போன்ற திரைப்படங்களை தயாரித்த டி – சீரீஸ் உரிமையாளர் பூஷன் குமார் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்.