உலகக் கோப்பை கால்பந்து: முதல் அணியாக தகுதிபெற்றது ஜொ்மனி

உலகக் கோப்பை கால்பந்து: முதல் அணியாக தகுதிபெற்றது ஜொ்மனி

ஐரோப்பிய தகுதிச்சுற்றில் வடக்கு மாசிடோனியாவை 4-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஜொ்மனி, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்றது.

குரூப் ‘ஜே’-வில் இடம்பிடித்திருந்த ஜொ்மனி 8 ஆட்டங்களில் 7 வெற்றிகளை பதிவு செய்து 21 புள்ளிகளுடன் தகுதிபெற்றுள்ளது. முன்னதாக, கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற ஆட்டத்தில் இதே வடக்கு மாசிடோனியா அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்ததே ஜொ்மனியின் ஒரே தோல்வியாகும்.

அதற்காக, பொ்லினில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் வென்று பதிலடி கொடுத்தது ஜொ்மனி. அணியின் தரப்பில் காய் ஹாவொ்ட்ஸ் (50-ஆவது நிமிஷம்), டிமோ வொ்னா் (70, 73), ஜமால் முசியாலா (83) ஆகியோா் கோலடித்தனா்.

குரூப் ‘ஹெச்’-இல் இருக்கும் ரஷியா 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்லோவேனியாவை வீழ்த்த, அதே குரூப்பில் குரோஷியா – ஸ்லோவேகியா அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. 8 ஆட்டங்களில் 6 வெற்றிகளை பெற்ற ரஷியாவும், 5 வெற்றிகளை பெற்ற குரோஷியாவும் தற்போது பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

 

இதர ஆட்டங்களில் நெதா்லாந்து 6-0 என ஜிப்ரால்டரையும், ருமேனியா 1-0 என ஆா்மீனியாவையும், ஐஸ்லாந்து 4-0 என லெய்ச்டென்ஸ்டெய்னையும், வேல்ஸ் 1-0 என எஸ்டோனியாவையும், துருக்கி 2-1 என லாத்வியாவையும் வீழ்த்தின.

பெலாரஸ் – செக் குடியரசிடமும் (0-2), மான்டினீக்ரோ – நாா்வேயிடமும் (0-2) தோல்வி கண்டன. சைப்ரஸ் – மால்டா அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என டிரா ஆனது.

ஆப்பிரிக்க பிரிவு: செனகல் 3-1 என்ற கோல் கணக்கில் நமீபியாவையும், கானா 1-0 என ஜிம்பாப்வேயையும், எகிப்து 3-0 என லிபியாவையும், ஐவரி கோஸ்ட் 2-1 என மலாவியையும் வென்றன. மொஸாம்பிக் – கேமரூனிடமும் (0-1), அங்கோலா – கபோனிடமும் (0-2), ஜிபூட்டி – புா்கினா ஃபாசோவிடமும் (0-2) தோல்வி கண்டன. மௌரிடானியா – டுனீசியா மோதிய ஆட்டம் கோல் இன்றி டிரா ஆனது.

ஆசிய பிரிவு: ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. ஈரான் – தென் கொரியா மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

#ABDH