எங்களுக்கு எவ்வளவு பிரச்சினை இருந்தது தெரியுமா? ருதுராஜ் வேதனை

எங்களுக்கு எவ்வளவு பிரச்சினை இருந்தது தெரியுமா? ருதுராஜ் வேதனை

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி இருக்கிறது. ஆர் சி பி அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 21 ரன்கள் எடுத்தால் கூட சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்றிருக்கும். ஆனால் 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாதது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் 14 போட்டிகளில் 7 போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கோம். இதனால் இது எனக்கு மகிழ்ச்சி தான் என்று பதில் அளித்து இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் தோல்வி குறித்து பேசிய அவர், ஆடுகளம் ரன்குவிக்க சாதகமாக தான் இருந்தது.

ஆனால் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிகமாக பந்து திரும்பியது. இதனால் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த இலக்கு அடிக்க கூடியது தான். இந்த தொடரில் எங்களுக்கு பல விஷயங்கள் சாதகமாக அமையவில்லை. கான்வே தொடக்கத்திலிருந்து ஒரு போட்டியில் கூட இந்த சீசனில் விளையாடவில்லை.

இது எங்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இதேபோன்று எங்களுடைய முக்கிய வீரரான பதிரானா காயம் காரணமாக விலகி விட்டார். இதேபோன்று வங்கதேச வீரர் முஸ்தஃபீசூர் ரஹ்மானும் பாதி போட்டிகளில் பங்கேற்கவில்லை. இப்படி பல வீரர்கள் காயம் காரணமாக விலகியது, எங்கள் அணியின் சமநிலையை பாதித்தது.

இதனால் எங்களால் வெற்றியை பெற முடியவில்லை. இது போன்ற விஷயங்கள் எல்லாம் கிரிக்கெட்டில் நடைபெறும். எனக்கு தனிப்பட்ட சாதனைகள் மீது நம்பிக்கை இல்லை. அணி வெற்றி பெற வேண்டும். அதுதான் எங்கள் அனைவருக்கும் முக்கியம் இந்த ஆட்டத்தில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏமாற்றமாக தான் இருக்கின்றது என்று சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் தெரிவித்துள்ளார்.