எங்களுக்கு வேற வழி தெரியலை கம்பீர்.. கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்க.. பிசிசிஐ-க்கு வந்த சோதனை!

எங்களுக்கு வேற வழி தெரியலை கம்பீர்.. கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்க.. பிசிசிஐ-க்கு வந்த சோதனை!

டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தனர். இதன்பின் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.

ரோஹித் சர்மா, விராட் கோலியை போல் சூர்யகுமார் யாதவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் கிடையாது. அதேபோல் களத்தில் ஆக்ரோஷம் காட்டாமல் அனைவருடனும் நட்பு பாராட்டும் வீரராகவே சூர்யகுமார் இருந்துள்ளார். எந்த சர்ச்சைகள், மோதல்களிலும் ஈடுபடாத சூர்யகுமார் யாதவ், இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதில் கிரிக்கெட் விமர்சகர்கள் இடையே ஆச்சரியம் தான்.

ஏனென்றால் சூப்பர்ஸ்டார் வீரர்களை முன்னிறுத்தியே பிசிசிஐ இதுவரை இயங்கி வந்துள்ளது. சச்சின், கங்குலி, தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட அனைவரும் பேட்டிங்கில் ஏராளமான சாதனைகளை செய்து, ரசிகர்களின் நம்பிக்கையை ஈர்த்திருந்தனர். ஆனால் இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் 3 ஆண்டுகளுக்கு முன்பாக தான் இந்திய அணிக்குள் இடம்பிடித்தார்.

இதன் காரணமாக பிசிசிஐ வேறு வழியில்லாமல் இலங்கை அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் கவுதம் கம்பீரை போஸ்டர் பாயாக பயன்படுத்தி வருகிறது. இந்தியா – இலங்கை டி20 தொடரின் ஒவ்வொரு விளம்பரங்களிலும் கம்பீர் தான் போஸ்டர் பாயாக இருந்து வருகிறார். வழக்கமாக பிஆர் குழுவினரை சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்யும் கலாச்சாரத்திற்கு கம்பீர் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

தற்போது பிசிசிஐ தரப்பில் கம்பீரை விளம்பரப்படுத்தும் வகையில் பிஆர் குழு செயல்படுவது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கம்பீர் சிரிக்கும் வீடியோக்கள், வீரர்களுடன் கலந்துரையாடும் வீடியோக்கள், ராகுல் டிராவிட் வாய்ஸ் மெசேஜை கேட்டு பதிலளிக்கும் வீடியோ என்று அடுத்தடுத்து வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

ராகுல் டிராவிட்டுக்கு கூட இப்படியான வீடியோக்களை பிசிசிஐ வெளியிடவில்லை. இதற்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது. இந்திய டி20 அணியில் சூப்பர் ஸ்டார் வீரர்கள் இல்லாததால், கம்பீரை சில காலம் போஸ்டர் பாயாக பயன்படுத்த பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோரை உருவாக்குவதன் மூலமாகவே இந்த சிக்கலில் இருந்து பிசிசிஐ தப்பிக்க முடியும் என்றும் பார்க்கப்படுகிறது.