எனக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி கொடுங்கள்.. முட்டி மோதும் நம்பர் 1 பவுலர்.. கண்டு கொள்ளாத பிசிசிஐ

எனக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி கொடுங்கள்.. முட்டி மோதும் நம்பர் 1 பவுலர்.. கண்டு கொள்ளாத பிசிசிஐ

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான பும்ரா தனக்கு கேப்டன் பதவி அளிக்க வேண்டும் என மறைமுகமாக கூறி இருக்கிறார். இந்த பேட்டியில் அவர் பந்து வீச்சாளர்களே வெற்றிகரமான கேப்டனாக இருந்துள்ளார்கள் என கூறி இருக்கிறார். மேலும், கபில் தேவ், மற்றும் இம்ரான் கான் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் முதல்முறையாக தங்கள் அணிகளுக்கு உலகக்கோப்பைகளை வென்று கொடுத்ததையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

இதன் மூலம் ரோஹித் சர்மாவுக்கு பின் தனக்கு இந்திய அணியின் கேப்டன் பதவியை வழங்க வேண்டும் என அவர் மறைமுகமாக பிசிசிஐக்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறார். அந்தப் பேட்டியில் பும்ரா பேசுகையில், “பந்து வீச்சாளர்கள் புத்திசாலிகள் என்று நான் கருதுகிறேன். ஏனெனில், அவர்கள் தான் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்க வேண்டும். பந்து வீச்சாளர்கள் தான் போராட்டக் களத்தில் இருக்கிறோம். ஒரு போட்டியில் தோல்வி ஏற்பட்டால் பந்து வீச்சாளர்களை தான் அனைவரும் குறை சொல்வார்கள். அது மிகவும் கடினமான பணியாகும்.” என்றார்.

மேலும், “கபில் தேவ் நமக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார். இம்ரான் கான் பாகிஸ்தானுக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார். இதை வைத்துப் பார்த்தாலே பந்துவீச்சாளர்கள் சாதூரியமானவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.” இவ்வாறு பும்ரா கூறி இருக்கிறார். இதன் மூலம் அவர் மறைமுகமாக தன்னையும் கேப்டனாக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.

பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் பதவியை அளிக்க வேண்டும் என பும்ரா கூறுவது முதல் முறை அல்ல. முன்னதாக 2023 டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வென்ற போதும் அவர் இதே போன்ற விஷயத்தை சொன்னார். பாட் கம்மின்ஸ் வேகப் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரோஹித் சர்மா இந்திய ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக இருக்கிறார். சுப்மன் கில்லை அடுத்த கேப்டனாக்க முயற்சி செய்து வருகிறது பிசிசிஐ. இதன் மூலம் பேட்ஸ்மேன்களே இந்திய அணியின் அடுத்த கேப்டன்களாக பரிசீலிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது தெரிய வருகிறது. எனவே, பும்ராவின் ஆசை நிறைவேறாமல் போகவே வாய்ப்பு அதிகம்.