எல்பிஎல் போட்டிகளில் ஜப்னா கிங்ஸ் அணியில் மூன்று தமிழ் பேசும் வீரர்களுக்கு வாய்ப்பு …!

எல்பிஎல் போட்டிகளில் ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியில் மூன்று தமிழ் பேசும் வீரர்களுக்கு வாய்ப்பு …!

இலங்கையில் இடம்பெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டிகளில் இரண்டாவது அத்தியாய போட்டிகள் வருகிற டிசம்பர் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகி 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

ஆரம்ப கட்ட போட்டிகள் ஆர்.பிரேமதாச மைதானத்திலும், அடுத்த கட்டப் போட்டிகள் அம்பாந்தோட்டை மைதானத்திலும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இதன் அடிப்படையில் நேற்று (09) ம் திகதி இடம்பெற்ற போட்டிகளுக்கான வீரர்கள் வரைவில் (Draft) ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியில் தமிழ்பேசும் வீரர்கள் மூவர் இணைக்கப்பட்டுள்ளனர்.

 

கடந்த எல்பிஎல் போட்டிகளில் விளையாடி சாம்பியனான யாழ்ப்பாணம் அணி, இம்முறை ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணி என பெயர் மாற்றம் பெற்று விளையாடவுள்ளது. ஜப்னா கிங்ஸ் அணியில் இம்முறை யாழ் மண்ணை சேர்ந்த இரு வீரர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஒரு வீரருமாக மூன்று தமிழ் பேசும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த LPL போட்டிகளில் அறிமுகம் மேற்கொண்ட யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த், அதேபோன்று சென் ஜோன்ஸ் கல்லூரி வீரரும் மிதவேகப்பந்துவீச்சு சகலதுறை வீரருமான தெய்வேந்திரம் டினோஷன், மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் முன்னாள் வீரர் ரத்னராஜா தேனுரதன் ஆகிய மூன்று வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று வீரர்களும் எல்பிஎல் போட்டிகளில் தங்களுடைய திறமையை காட்டுவதன் மூலமாக, தமிழ் பேசுகின்ற வீரர்களுக்கும் இலங்கையின் தேசிய கிரிக்கெட் அரங்கில் நுழைவதற்கான அடிப்படை அத்தியாயத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நம்பிக்கை உருவாகும் என நம்பப்படுகிறது.

ஜப்னா கிங்ஸ் குழாம் _2021

பெfப் டு பிளசிஸ் (தென்னாபிரிக்கா), திசர பெரேரா, வஹாப் ரியாஸ் (பாகிஸ்தான்), வனிந்து ஹஸரங்க, சொஹைப் மலிக் (பாகிஸ்தான்), உஸ்மான் ஷின்வாரி (பாகிஸ்தான்), ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்), அவிஷ்க பெர்னாண்டோ, உபுல் தரங்க, சதுரங்க டி சில்வா, ஜெய்டன் சீல்ஸ் (மே.தீவுகள்), சுரங்க லக்மால், அஷேன் பண்டார, மஹீஷ் தீக்ஷன, சாமிக குணசேகர, விஜயகாந்த் வியாஸ்காந்த், தெய்வேந்திரம் டினோஷன், அஷேன் ரந்திக, ரத்னராஜா தேனுரதன், கிரிஷான் சஞ்சுல

அணியின் பணிப்பாளர் கணேஷன் வாகீசன்

இதற்கான அனைத்து முனைப்புக்களையும் ஜப்னா கிங்ஸ் அணி இந்த பருவ காலத்திலும் ஆர்வத்தோடு மேற்கொண்டு வருவதாகவும் சிறந்த கள அனுபவமுள்ள வீரர்களோடு இன்னும் உத்வேகத்துடனும் புதிய வியூகங்களுடனும் இம்முறையும் வெற்றியை இலக்கு வைத்து தன்னம்பிக்கையோடு களம் இறங்க தயாராகிறது என அணியின் பணிப்பாளர் திரு. கணேசன் வாகீசன் தெரிவித்துள்ளதும் இம்முறை ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியின் உரிமையாளராக சர்வதேச புகழ்பெற்ற இலங்கையின் வடபகுதியை பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபரான Lyca குழுமத்தின் தலைவர் திரு. அல்லிராஜா பாஸ்கரன் விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது

 

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி தமிழ் பேசும் மக்களின் அதீத விருப்பையும், தமிழ்நாட்டு மக்களின் விருப்புக்குரிய அணியாகவும் மிளிர்கிறதோ, அதேபோன்று இலங்கையில் எலபிஎல் போட்டிகளில் Jaffna Kings அணி திகழ்கிறது என்பதில் ஐயமில்லை, அதற்கு Jaffna என்று பெயர் பொறிக்கப்பட்டது மாத்திரம் காரணமல்லாமல் அவர்கள் தமிழ் பேசும் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் நுழைவதற்கான ஆரம்ப வாய்ப்பை இந்த எல்பிஎல் போட்டிகளூடாக வழங்கி வருகின்றமையே பிரதான காரணமாக அமைகிறது.

ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings )மீண்டும் ஒருமுறை LPL தொடரில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த வாழ்த்துவோம்.

#S.முகுந்தன்