“எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும்..” தோனியை வெளுத்து வாங்கிய வீரேந்தர் சேவாக்.. என்ன சொன்னார்?
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில், முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி அவர் அதிரடியான சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் கடைசி இரண்டு ஓவர்களில் குறிப்பிட்ட செயலை செய்ய முடியாது என தோனி குறித்து விமர்சித்து இருக்கிறார். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் சிஎஸ்கே அணியால் 180 ரன்களுக்கும் அதிகமான இலக்கை எட்ட முடியவில்லை எனவும் சேவாக் பேசியிருக்கிறார்.
நேற்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் 39 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது. ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி என இரண்டு அனுபவ வீரர்கள் களத்தில் இருந்தனர்.
தோனி அதிரடியாக சிக்ஸர்களை அடித்து வெற்றியை பெற்று தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 19வது ஓவரில் சிஎஸ்கே அணி 19 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் தோனி கடைசி ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணி கடைசி ஓவரில் 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இது பற்றி பேசிய வீரேந்தர் சேவாக், தோனி இதற்கு முன் எத்தனை முறை ஒரு ஓவரில் 20 ரன்களுக்கும் அதிகமாக அடித்திருக்கிறார்? என ஒரு புள்ளிவிவரத்தையும் வெளியிட்டு இருக்கிறார். இது பற்றி மேலும் சேவாக் பேசுகையில், “இரண்டு ஓவர்களில் 40 ரன்கள் எடுப்பது என்பது மிகவும் கடினமான பணியாகும். எத்தனை பெரிய வீரர் களத்தில் இருந்தாலும் அதை செய்வது மிகவும் கடினம். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் அது போல வெற்றி பெறலாம்.”
“தோனி ஒரு முறை அக்சர் படேலுக்கு எதிராக 24 அல்லது 25 ரன்களை அடித்தார் என்று நினைக்கிறேன். மற்றொரு சமயம் இர்பான் பதானுக்கு எதிராக தரம்சாலாவில் 19 அல்லது 20 ரன்கள் எடுத்தார். இதுபோல ஒன்று அல்லது இரண்டு போட்டிகளை மட்டும் தான் நாம் நினைவில் இருந்து எடுக்க முடியும். சமீபத்தில் இதுபோல நடந்ததாக எனக்கு நினைவில் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 180 ரன்களுக்கும் அதிகமான இலக்கை எட்ட முடியவில்லை” என்று கூறி இருக்கிறார் வீரேந்தர் சேவாக்.