எதிர்வரும் 18ஆம் திகதி இங்கிலாந்தில் இடம்பெற இருக்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் வெல்லப்போவது யார் என நியூசிலாந்தின் முன்னாள் தலைவர் பிரெண்டன் மெக்கல்லம் கணித்துள்ளார்.
அவரது கணிப்புப்படி இந்த போட்டியில் வெல்வதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் நியூஸிலாந்துக்கு காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
குறிப்பாக இந்தியாவுடனான இறுதிப்போட்டி இடம் பெறுவதற்கு முன்னதாக நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுகிறது, இந்த இரண்டு டெஸ்ட் ஆட்டங்களும் நியூஸிலாந்துக்கு இந்த இறுதிப் போட்டிக்கான முன்னாயத்த வாய்ப்பாக அமைந்துவிடும் என பிரண்டன் மெக்கலம் தெரிவித்திருக்கிறார்.
ஆடுகளத்தின் தன்மை ,சீதோஷ்ணநிலை எல்லாவற்றுக்கும் ஏற்ற விதத்தில் நியூசிலாந்து வீரர்கள் தயாராகி விடுவார்கள். இது அவர்களுக்கான சாதகம் எனக் குறிப்பிட்டிருக்கும் மெக்கலம், இந்தியாவை குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு 60 க்கு 40 எனும் அடிப்படையில் நியூஸிலாந்துக்கு அதிகமாக காணப்படுவதாக பிரண்டன் மெக்கலம் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.