ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டிகளில் அதிக தடவைகள் தோல்வியை தழுவிய அணிகள் – முதலிடத்தை நோக்கி நகரும் இந்தியா..!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடத்திவரும் ஐசிசி தொடரின் இறுதிப் போட்டிகளில் தோல்வியை தழுவிய அணிகளின் வரிசையில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றமை வேதனைக்குரியதே.

சர்வதேச கிரிக்கெட் பேரவை நடத்திய ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

ஐசிசி தொடரின் இறுதிப் போட்டிகளில் இந்திய அணி கிண்ணத்தை வெற்றிகொள்ள முடியாது தோல்வியை தழுவியது ஐந்தாவது இறுதிப் போட்டியாக இந்த போட்டி அமைந்திருக்கிறது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இங்கிலாந்து அணி காணப்படுகிறது, 6 ஐசிசி தொடரின் இறுதிப் போட்டிகளில் இங்கிலாந்து தோல்வியைத் தழுவியுள்ளது. இந்தியா இப்போது 5 தோல்விகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இதற்கடுத்த நிலையில் இலங்கை அணி காணப்படுகிறது, இலங்கை அணி 4 ஐசிசி தொடரின் இறுதிப் போட்டிகளில் தோல்வியை தழுவிய அதே நேரத்தில் அவுஸ்திரேலிய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் ஐசிசி தொடரின் இறுதிப் போட்டிகளில் தலா மூன்று தடவைகள் தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் அண்மைக்காலமாக 2013-ம் ஆண்டுக்குப் பின்னர் ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டிகளில் தோல்வியை தழுவி கிண்ணத்தைக் கோட்டைவிடும் பாரம்பரியம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

1983 கபில்தேவ் தலைமையில் உலக கிண்ணத்தையும், 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி T20 உலக கிண்ணத்தையும் , 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கிண்ணத்தையும்( Champions Trophy) இந்தியா கைப்பற்றியது.

அதனை விடுத்து மொத்தமாக 5 இறுதிப் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியமை குறிப்பிடக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.

அதுவும் கடந்த 8 ஆண்டுகளில் ஆடவர் ,மகளிர் அடங்கலாக 7 இறுதிப் போட்டிகளில் இந்தியா கிண்ணத்தை இழந்துள்ளமையும் பரிதாபத்துக்குரியதே.