ஐபிஎல் 2022: பரபரப்பான ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!

ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் அறிமுக அணிகளான குஜராத் டைட்டன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரரும், கேப்டனுமான கேஎல் ராகுல், முகமது ஷமி வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அதன்பின் முகமது ஷமி வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் குயிண்டன் டிக் காக் 7 ரன்களிலும், மனீஷ் பாண்டே 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மேலும் எவின் லூயிஸ் 10 ரன்களுக்கு வருண் ஆரோனிடம் வீழ்ந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா – ஆயூஷ் பதோனி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.

இதில் அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். இறுதியில் குர்னால் பாண்டியா தனது பங்கிற்கு 21 ரன்களைச் சேர்த்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆயூஷ் பதோனி 54 ரன்களையும், தீபக் ஹூடா 55 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுப்மன் கில், விஜய் சங்கர் ஆகியோர் சமீராவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் – கேப்டன் ஹர்திக் பாண்டியா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹர்திக் பாண்டியா 33 ரன்களில் ஆட்டமிழக்க, 30 ரன்களில் மேத்யூ வேடும் நடையைக் கட்டினார்.

இதையடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் – ராகுல் திவேத்தியா முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பின் அதிரடியாக விளையாடியது. இதனால் வெற்றி குஜராத் அணி பக்கம் தான் என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால் ஆட்டத்தில் பரப்பரப்பை கூட்டும் விதமாக 30 ரன்கள் எடுத்திருந்த டேவிட் மில்லரை ஆவேஷ் கான் வெளியேற்றினார். இருப்பினும் குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பெற்றது.


இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுல் திவேத்தியா 40 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்