ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை இளையோர் அணியுடன் கைகோர்கிறார் மஹேல ஜெயவர்த்தன…!

இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்தன 2021 அக்டோபர் முதல் இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கிண்ணத்துக்கான அணியைத் தயார்படுத்த மஹேல ஜெயவர்த்தன தன்னுடைய முழுமையான பங்களிப்பை நல்கவுள்ளதாக  கூறப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின்(Technical Committee) தலைவர் அரவிந்த டி சில்வா, இலங்கை இளையோர் அணிக்கான குழாமுடன் இணைந்து பணியாற்ற மஹேல ஜெயவர்தன ஒப்புக் கொண்டதை உறுதிப்படுத்தினார்.

இளையோர் அணியின் பயிற்சியாளர் குழாமுடன் ஜூனியர் கிரிக்கட்டர்களுக்கு அவர் வழிகாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹேல ஜெயவர்தன தற்போது வெளிநாட்டில் உள்ளார், செப்டம்பர் மாதம் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளுக்குப் பிறகு இலங்கைக்கு திரும்பி ஒக்டோபர் மாதம்முதல் இளையோர் அணியை வளப்படுத்தும் பணியில் மஹேல பங்களிப்பை நல்கவுள்ளார்.

இதிலே வரவேற்கப்படக்கூடிய விடயம் என்னவென்றால் மஹேல ஜெயவர்தன, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டிடமிருந்து ஊதியம் எதனையும் பெறாது இலவசமாக பணியாற்றப்போவதாக தொழில்நுட்பக் குழுவுக்கு அறிவித்ததாக கூறப்படுகிறது.

இலங்கையின் இளையோர் அணியை திறம்படவும் ,ஒழுக்கத்துடனும் கட்டியெழுப்ப கைகோர்க்குமாறு அரவிந்த டீ சில்வா முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டே இந்த நல்ல நடவடிக்கையில் மஹேல இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.