ஒன்பது ஆண்டுகள் ,11 ஆட்டங்களில் முதல் வெற்றி இலங்கைக்கு, தொடர் இந்தியா வசம்..!

ஒன்பது ஆண்டுகள் ,11 ஆட்டங்களில் முதல் வெற்றி இலங்கைக்கு, தொடர் இந்தியா வசம்..!

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, இன்று மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் 5 புதுமுக வீரர்களுடன் களம் கண்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பம் அமோகமாக இருந்தாலும் அதன் பின்னர் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் காரணமாக வெறுமனே 225 ஓட்டங்களுக்குள் சுருண்டது .

226 எனும் இலகுவான இலக்குடன் களம் புகுந்த இலங்கை அணிக்கு அவிஷ்க பெர்னான்டோ மற்றும் பானுக்க ராஜபக்ச ஆகியோர் அதிரடியான அரைசதம் அடித்து, இரண்டாவது விக்கட்டில் சத இணைப்பாட்டம் புரிந்து இலங்கையின் வெற்றியை இலகுபடுத்தினர்.

ஆனாலும்கூட அதன் பின்னர் வந்த வீரர்கள் விரைவாக விக்கெட்டுகளை இழந்து ஒரு கட்டத்தில் இலங்கை நெருக்கடியை சந்தித்தது.

இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து இந்த போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

இலங்கை அணியைப் பொறுத்தவரையில் இந்திய அணிக்கு எதிராக 9 வருடங்களுக்குப் பின்னர் சொந்த மண்ணில் வைத்து ஒருநாள் போட்டி ஒன்றில் வெற்றி ஒன்றை கண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 10 ஒருநாள் போட்டிகளில் தோல்வியை தழுவிய இலங்கை அணி, 11 போட்டியில் வெற்றி பெற்றிருக்கின்றமை  சுட்டிக்காட்டத்தக்கது .

இந்தியாவின் இன்றைய வீழ்ச்சிக்கு அகில தனஞ்சய மற்றும் பிரவின் ஜெயவிக்ரம ஆகியோரின் சுழல் பந்து வீச்சே காரணம் என்பதும் குறிப்பிடதக்கது .

அதனையும் கடந்து ராஜபக்சவினுடைய அதிரடி ,அவிஸ்க பெர்னான்டோவினுடைய நிதானமான துடுப்பாட்டம் எல்லாம் சேர்த்து இலங்கைக்கு அற்புதமான வெற்றியை பரிசளித்திருக்கிறது .

இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 – 1 என புதிய தலைவர் தவான் தலைமையில் கைப்பற்றியது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

தொடர் நாயகன் விருது சூரியகுமார் வசமானது.