இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரே ஒரு மாற்றத்தை செய்தால் நிறைய பலன்களை பெற முடியும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறி இருக்கிறார்.
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை குறைந்தபட்சம் டிரா செய்வதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருந்தும் போட்டியை தோற்றது. இந்த நிலையில் இரண்டாவது போட்டியை கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது. மேலும் பவுலிங் யூனிட்டில் மட்டுமே மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை அதிகமாக இருக்கிறது.
இங்கிலாந்துக்கான வியூகம்
இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாடும் பாணியை கடந்த இரண்டு ஆண்டுகளாக பின்பற்றி வருகிறது. எனவே தாக்குதல் பாணியில் பந்து வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் தேவையாக இருக்கிறார்கள். ரன்கள் சென்றாலுமே அவர்களால் விக்கெட் கைப்பற்ற முடியும்.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பவுலிங் யூனிட்டில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூரை நீக்கிவிட்டு, அவருடைய இடத்திற்கு இன்னொரு வேகப்பந்து வீச்சாளரை கொண்டு வருவதற்கான பேச்சுகள் சென்று கொண்டிருக்கும் நிலையில், மைக்கேல் கிளார்க் வித்தியாசமான யோசனையை இந்திய அணிக்கு தெரிவித்திருக்கிறார்.
இவரை விளையாட வையுங்கள்
இது குறித்து மைக்கேல் கிளார்க் பேசும் பொழுது ” இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை விளையாட வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் ரன்கள் கொடுத்தாலும் நிச்சயம் விக்கெட் கைப்பற்றுவார். ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக இருப்பார் என்று நினைத்தேன் ஆனால் அவர் ஏமாற்றி விட்டார். அவர் ஆடுகளம் சேதமடைந்த பகுதிகளை குறி வைத்து வீசவில்லை”
“நீங்கள் இங்கிலாந்தை வெற்றி பெற வேண்டும் என்றால் 20 விக்கெட்டுகள் எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். எனவே நீங்கள் அபாரமான ஃபார்மில் இருக்கும் தாக்குதல் பவுலர் குல்தீப் யாதவை விளையாட வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸில் அவரால் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை வேகமாக கொண்டு வர முடியும். மேலும் தன்னம்பிக்கை உடனும் சிறப்பாகவும் பார்மிலும் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.