2032ல் ஒலிம்பிக் போட்டி பிரிஸ்பேனில் நடைபெறும் -சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு..!
2032ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை பிரிஸ்பேனில் நடத்துவது தொடர்பாக இன்று(21) டோக்கியோவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சர்வதேச ஒலிம்பிக் சங்க உறுப்பினர்கள் வாக்கெளித்தனர்.
2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்து, இந்தோனேசியா, ஹங்கேரி, அவுஸ்திரேலியா, சீனா, கட்டார், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன.
இவற்றை பரிசீலனை செய்த சர்வதேச ஒலிம்பிக் சங்கம், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை தேர்வு செய்தது. இதற்கு ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகக் குழு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.
மொத்தம் 80 வாக்கு அட்டைகள் வழங்கப்பட்டன. இதில், 77 வாக்குகள் பதிவாகின. பெரும்பான்மைக்கு 39 வாக்குகள் தேவை என்ற நிலையில், பிரிஸ்பேனில் போட்டியை நடத்த 72 பேர் ‘ஆம்’ என்று வாக்களித்தனர்.
5 பேர் மட்டும் ‘இல்லை’ என்று வாக்களித்தனர். இதையடுத்து, 2032ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு பிரிஸ்பேன் நகரம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் சங்க தலைவர் தாமஸ் பாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியானதும், பிரிஸ்பேனில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ஆஸ்திரேலியா ஏற்கனவே இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியை நடத்தி உள்ளது. 1956ல் மெல்போர்னிலும், 2000ல் சிட்னியிலும் ஒலிம்பிக் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.