ஓய்வு பெறுவதே காமெடியாகிவிட்டது.. பென் ஸ்டோக்ஸ் செய்த வேலை.. நக்கல் செய்த ரோஹித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டு மீண்டும் ஐசிசி தொடருக்கு முன் கம்பேக் கொடுப்பதை சில வீரர்கள் வாடிக்கையாக வைத்திருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விமர்சித்துள்ளார். ஆனால் மற்றவர்களை போல் அல்லாமல் இனி டி20 கிரிக்கெட் பக்கம் வர மாட்டேன் என்றும் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. 43 நாட்கள் விடுமுறைக்கு பின் இந்திய அணி ஹோம் சீசனில் விளையாட தொடங்கவுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதனிடையே வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதில் சீனியர் வீரர்களான சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் டி20 தொடருக்கு கம்பேக் கொடுக்கவுள்ளனர். அதேபோல் சுப்மன் கில், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஜியோ சினிமா செயலியில் ஒரு பேட்டியளித்துள்ளார்.
அதில், டி20 கிரிக்கெட்டில் ஓய்வில் இருந்து வெளியேறி மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்புகள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு அறிவிப்பு என்பதே ஜோக்காகிவிட்டது. சிலர் ஓய்வை அறிவித்துவிட்டு, திடீரென மீண்டும் விளையாட வந்துவிடுகிறார்கள். இந்தியாவில் அதுபோல் நடப்பதில்லை. ஆனால் மற்ற நாடுகளில் இதுபோன்று செயல்பட்டு வீரர்களை கவனித்து வருகிறேன்.
ஓய்வை அறிவித்துவிட்டு உடனடியாக யூ-டர்ன் போடுகிறார்கள். அதனால் அந்த வீரர்கள் உண்மையாகவே ஓய்வு பெற்றுவிட்டார்களா என்ற குழப்பம் இருக்கிறது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வை அறிவித்தது உண்மை தான். மீண்டும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு வாய்ப்பே கிடையாது. டி20 கிரிக்கெட்டுக்கு குட் பை சொல்வதற்கான சரியான நேரத்தில் நான் ஓய்வை அறிவித்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட்டில் ஓய்வு அறிவிப்பதும், மீண்டும் அணிக்கு திரும்புவதும் வழக்கமாகி வருகிறது. ஆஷஸ் தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த மொயின் அலி மீண்டும் சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கு ஓராண்டுக்கு முன்பே ஓய்வு பெற்றிருந்த பென் ஸ்டோக்ஸ், உலகக்கோப்பை நெருங்கிய பின் மீண்டும் இங்கிலாந்து அணியுடன் இணைந்தார்.
இங்கிலாந்து வீரர்களை நேரடியாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நக்கல் செய்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்திய கிரிக்கெட்டில் வீரர்கள் ஒருமுறை ஓய்வை அறிவித்துவிட்டால், மீண்டும் அணிக்கு திரும்பும் வழக்கம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.