கம்பீருக்கு டாட்டா பைபை? பிசிசிஐ அதிரடி முடிவு.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தான் கடைசி சான்ஸ்

கம்பீருக்கு டாட்டா பைபை? பிசிசிஐ அதிரடி முடிவு.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தான் கடைசி சான்ஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. எனினும், இது முழு அளவிலான பதவி நீக்கமாக இருக்காது எனவும் கூறப்படுகிறது. 2024 டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டார்.

அவரது தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பை வென்றது. அத்துடன் அவர் இந்திய அணியில் இருந்து விடை பெற்றார். அதன் பின் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் விரும்பியபடி இரண்டு துணைப் பயிற்சியாளர்கள், ஒரு வெளிநாட்டு பவுலிங் பயிற்சியாளர் ஆகியோரை நியமித்தது பிசிசிஐ.

கம்பீர் பயிற்சியாளராக வந்த பின் இந்திய அணி ஆடிய முதல் ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக 0 – 3 என படுதோல்வி அடைந்தது. அதன் பின் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 0 – 3 என இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அதனால் கம்பீர் மீது கடும் விமர்சனம் எழுந்து இருக்கிறது.

அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தத் தொடரிலும் இந்திய அணி தோல்வி அடைந்தால் அத்துடன் கவுதம் கம்பீர் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர் அதன் பின் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளராக மட்டுமே செயல்படுவார். அப்படி நடந்தால் விவிஎஸ் லக்ஷ்மன் இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார். டிராவிட்டுக்கு பின் விவிஎஸ் லக்ஷ்மனை இந்திய அணியின் பயிற்சியாளராக வருமாறு பிசிசிஐ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ஆனால், அவர் முழு நேரமாக இந்திய அணியின் பயிற்சியாளராக வருவதை விரும்பவில்லை. இந்திய அணி வருடம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் என்பதால் தனது குடும்பத்தினரை விட்டு ஒரு வருடத்தில் பத்து மாதங்கள் சுற்றுப்பயணங்களில் இருப்பதை அவர் விரும்பவில்லை.

ஆனால், டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக மட்டும் நியமிக்கப்பட்டால் ஒரு ஆண்டில் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் மட்டுமே இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். எனவே, விவிஎஸ் லக்ஷ்மன் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக வர ஒப்புக் கொள்வார் எனவும் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இந்திய அணிக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது நடந்தால் அது கவுதம் கம்பீருக்கு பெரும் பின்னடைவாகவும் இருக்கும்.