கம்பீர் – சர்ஃபராஸ் விவகாரம்.. இது நியாயமே இல்லை.. சின்னப் பையன் வாழ்க்கையை காலி பண்ணிடாதீங்க
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஓய்வறையில் நடந்த சம்பவங்களை டெஸ்ட் அணி வீரர் சர்ஃபராஸ் கான் ஊடகங்களுக்கு தெரிவித்தார் என கம்பீர் பிசிசிஐ அதிகாரிகளின் கூட்டத்தில் பேசியதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது.
அது பற்றி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. இந்த தகவல் உண்மையா என்றே தெரியாத நிலையில், இது போன்ற செய்திகளால் சின்ன பையனான சர்ஃபராஸ் கானுக்கு எத்தனை தீங்கு நடக்கும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 – 3 என தோல்வி அடைந்தது. அந்த தொடரின் இடையே வீரர்கள் அறையில் கவுதம் கம்பீர் கடுமையாக பேசியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அந்த செய்தி ஊடகங்களில் வெளியானது.
அந்த தகவலை கசியவிட்டது சர்ஃபராஸ் கான் தான் என பிசிசிஐ ஆய்வுக் கூட்டத்தில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்ததாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அது பற்றி ஆகாஷ் சோப்ரா தனது யூட்யூப் சேனலில் பேசி இருக்கிறார். “சர்ஃபராஸ் கான் ஒரு தகவலை கசிய விட்டதாக கம்பீர் பிசிசிஐ அதிகாரிகளிடம் ஒரு அறையில் பேசிய விஷயம், மீண்டும் ஊடகங்களுக்கு கசிந்து இருக்கிறது.”
“கவுதம் கம்பீர் ஆய்வுக் கூட்டத்தில் அதை பற்றி பேசியதாக யாரோ ஒருவர் மீண்டும் ஒரு தகவலை கசிய விட்டு இருக்கிறார். அந்தப் பையனைப் பற்றிய இந்த கதை உண்மையா? இல்லையா? என தெரியாது. ஆனால், கவுதம் கம்பீர் பேசியது ஒரு பத்திரிக்கையாளருக்கு தெரிந்து இருக்கிறது. இது வியப்பை ஏற்படுத்துகிறது. ஒரு தகவல் கசிவு பற்றிய செய்தி மற்றொரு தகவல் கசிவின் மூலம் தெரிய வருகிறது.”
“இங்கே என்னதான் நடக்கிறது? இது போன்ற விஷயங்களால் அந்தப் பையனுக்கு எத்தனை தீங்கு நடக்கும் என சிந்தித்துப் பாருங்கள். இது பற்றி அந்தப் பையன் எந்த எதிர்வினையும் செய்ய மாட்டான். அப்படி செய்யாமல் இருப்பதும் நல்லது தான். அந்த சின்னப் பையனின் வாழ்க்கையை ஏன் வீணாக்குகிறீர்கள்? யாரோ ஒருவரின் பெயரை உங்கள் இஷ்டத்துக்கு வெளியில் சொல்லாதீர்கள்.” என்று ஆகாஷ் சோப்ரா காட்டமாக பேசி இருக்கிறார்.
மேலும் பும்ரா படுக்கையில் இருப்பதாக வெளியான தவறான செய்தி ஒன்றை உதாரணமாக சுட்டிக் காட்டினார் ஆகாஷ் சோப்ரா. “சில சமயம் இது போன்ற தகவல் கசிவு செய்திகள் நம்பகத்தன்மையுடன் இருப்பதில்லை. ஜஸ்பிரித் பும்ரா நேற்று இதை வெளிப்படுத்தி இருக்கிறார். யாரோ ஒருவர் பும்ரா படுக்கையில், ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக செய்தியை வெளியிட்டு இருந்தார். பும்ரா அந்த செய்தியை பொய்யான தகவல் என வெளிப்படுத்தி இருந்தார். ஒருவேளை பும்ரா அந்த விஷயத்தை பற்றி சொல்லி இருக்காவிட்டால் அது உண்மை என்பதாகவே ஆகி இருக்கும்.” இவ்வாறு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.