கம்பீர் போட்ட போடு.. சீனியரை கழட்டி விட்டு தமிழக வீரருக்கு உடனே இந்திய அணியில் இடம்
வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு இடம் அளிக்கப்பட்டு இருந்தது. இதன் பின்னணியில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருப்பதாக சுட்டிக் காட்டப்படுகிறது.
மேலும், வருண் சக்கரவர்த்திக்காக அனுபவ சுழற் பந்துவீச்சாளர் சாஹலுக்கு டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. சாஹலுக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. இடையே 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சாஹல் இடம் பெற்று இருந்தார். ஆனால், உலக கோப்பையில் ஒரு போட்டியில் கூட அவர் களமிறங்கவில்லை.
இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது. பின் சாஹல் தொடர்ந்து இந்திய டி20 அணியில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மூத்த சுழற் பந்துவீச்சாளர் ஜடேஜா ஓய்வு பெற்றதால் அவரது இடத்தை நிரப்பும் வகையில் சுழற் பந்துவீச்சாளராக சாஹல் இந்திய அணியில் நீடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதன் பின்னரும் அவருக்கு டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை.
தற்போது அவருக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். சாஹலை போன்றே அவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எந்த காரணமும் இன்றி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் சிறப்பாக செயல்பட்டு வந்தார். 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் இருந்தார்.
அப்போது அவர் வருண் சக்கரவர்த்தியின் திறமையை அருகே இருந்து பார்த்தார். வருண் போட்டிக்கு தயாராகும் விதம் மற்றும் போட்டிகளில் அழுத்தமான சூழ்நிலைகளிலும் அதை சமாளித்து பந்து வீசும் விதம் ஆகியவற்றை அருகில் இருந்து பார்த்த கம்பீர், தற்போது அவருக்கு டி20 அணியில் வாய்ப்பை பெற்றுக் கொடுத்து இருக்கிறார்.
வருண் சக்கரவர்த்திக்கு டி20 அணியில் இடம் அளிக்க வேண்டும் என பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவிடம் கம்பீர் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்தே வருண் சக்கரவர்த்தி இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவர் வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு போட்டியிலாவது பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.