கம்பீர் – The Good, The Bad and The ugly.. இனி தான் முக்கிய சீனே இருக்கு.

கம்பீர் – The Good, The Bad and The ugly.. இனி தான் முக்கிய சீனே இருக்கு.. ரசிகர்கள் தயாராகுங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதால் அடுத்து இனி அதிரடி மாற்றங்களும் அதிரடி அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் டிராவிட் இந்திய அணியில் அமைதியான வீரராக கருதப்படுவார்.

அவர் எந்த ஒரு ஆக்ரோஷமான செயலிலும் இதுவரை ஈடுபட்டு எந்த சர்ச்சையிலுமே சிக்கியது இல்லை. ஆனால் கம்பீர் கொஞ்சம் கோவக்காரர். களத்தில் ஆக்ரோசமாக செயல்படக்கூடியவர். பார்ப்பதற்கு அம்பி போல் இருந்தாலும் களத்தில் அந்நியனாக செயல்படுவார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இடையே மட்டுமல்லாமல் இந்திய அணியில் இருக்கும் வீரர்களுடன் கூட அடிக்கடி கம்பீர் மோதலில் ஈடுபட்டு இருக்கிறார். உதாரணத்திற்கு தன்னுடைய ஜூனியர் வீரரான விராட் கோலி இடம் அவர் போட்ட சண்டை அனைவருக்கும் நினைவு இருக்கலாம். இந்த நிலையில் அதே விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்களை எவ்வாறு பயிற்சியாளராக கம்பீர் வழிநடத்த போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தி குட், தீ பேட் அண்ட் தி அக்லி என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் கம்பீருக்கு மூன்று முகங்கள் இருக்கின்றது. பயிற்சியாளராக கம்பீர் ஒரு அணிக்கு என்ன வேண்டுமோ அதை செய்வார். அதாவது இது செய்தால்தான் நல்லது என்றால் அது எவ்வளவு கடினமாக காரியமாக இருந்தாலும் அதை செய்ய சொல்வார். உதாரணத்திற்கு இனி ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும்தான் விளையாட வேண்டும்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதேபோன்று வீரர்கள் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுவது கம்பீருக்கு சுத்தமாக பிடிக்காது. உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பு கம்பீருக்கு கிடைத்தும் அணிக்காக அதிரடியாக விளையாடி தன்னுடைய விக்கெட்டை இழந்தவர் தான் கம்பீர்.

மேலும் விராட் கோலி போன்ற வீரர்கள் தனிப்பட்ட சாதனைக்காக விளையாடுவதாக கம்பீர் பலமுறை மறைமுக குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இதனால் அரை சதம், சதம் அடிக்க பந்துகளை வீரர்கள் பந்தை வீணடித்தால் நிச்சயம் கம்பீரின் கோபத்திற்கு ஆளாக கூடும். இதனால் கம்பீருக்கும் சீனியர் வீரர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

இதேபோன்று ஒருவருக்கு திறமை இருக்கிறது என்று தெரிந்தால் நிச்சயம் அவருக்கு வாய்ப்பு கொடுத்து அவரை கம்பீர் முன்னேற்றுவார். இதனால் பல இளம் வீரர்கள் கம்பீரின் பயிற்சியாளர் பதவி காலத்தில் முன்னேற வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த கம்பீரின் மூன்று முகமும் அடிக்கடி இனி வெளிப்படும் என்பதால் இந்திய கிரிக்கெட் பல சுவாரசியமான கட்டங்களை எதிர்நோக்கி இருக்கின்றது.