குசலின் அதிரடியில் பங்களாதேஷில் ஆறுதல் வெற்றியை தனதாக்கியது இலங்கை அணி..!

வங்கதேச கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி டாக்கா மைதானத்தில் சற்றுமுன்னர் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த போட்டியில் அணித்தலைவர் குசல் பெரேராவின் அதிரடி சதம், பந்துவீச்சாளர்களின் அபாரதிறமையும் கைகொடுக்க, அமோகமான வெற்றியுடன் இலங்கை அணி தொடரை நிறைவுக்கு கொண்டு வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் குசல் பெரேரா முதலில் துடுப்பாடும் வாய்ப்பை தமதாக்கினார்.

 

இதன்படி இலங்கை அணி முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 77 ஓட்டங்களைப் பெற்று அமோகமான ஆரம்பத்தை பெற்றது. பின்னர் விக்கெட்டுக்கள் சரிக்கப்பட்டாலும் அணித்தலைவர் குசல் பெரேராவுக்கு பங்களாதேஷ் வீரர்கள் 3 வாய்ப்புக்களை நழுவவிட அதனைப் பயன்படுத்திக்கொண்டு அபார சதமடித்து 120 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். தனஞ்சய டீ சில்வா ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, இதனால் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைக் குவித்தது .

முதல் இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரை இழந்த இலங்கைக்கு இன்று ஒரு ஆறுதல் வெற்றி தேவைப்பட ,இந்த நிலையில் இலங்கை அணி சார்பில் இன்று டிக்வெல்ல அணிக்கு கொண்டுவரப்பட்ட அதேநேரம் இலங்கை சார்பில் 3 வீரர்களுக்கு இன்று அறிமுகம் வழங்கப்பட்டது.

சகலதுறை ஆட்டக்காரரான ரமேஷ் மென்டிஸ், சமிக்க கருணாரத்ன மற்றும் பினுர பெர்னான்டோ ஆகியோருக்கும் இன்று அறிமுகம் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பலம் பொருந்திய அணியாக இலங்கை இன்றைய போட்டியை எதிர்கொண்டு 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மஹ்மதுல்லா அதிகபட்சமாக 53 ஓட்டங்களை பெற்றார்.

பங்களாதேஷ் அணி 42.3 ஓவர்களில் 189 ஓட்டங்களில் ஆட்டமிழக்க 97 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது. பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 5 விக்கெட்டுக்களையும், ஹசாரங்க, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் விருது அணித்தலைவர் குசல் பெரேராவுக்கு கிடைத்தது.
ஆயினும் பங்களாதேஷ் அணி வரலாற்றில் முதல்முறையாக தொடரை 2 -1 என்று கைப்பற்றியமை கவனிக்கத்தக்கது.