கோலிக்கு துணையாக பயணிக்கும் ஸ்மித் – எப்போது தீரும் இந்த ஏக்கம் ?

விராட் கோலியை போலவே சதம் அடிக்க முடியாமல் திணறும் ஸ்டீவன் ஸ்மித்

பாகிஸ்தானுக்கு 24 ஆண்டுகள் கழித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் 2 போட்டிகள் தார் ரோட் போல அமைக்கப்பட்ட பிட்ச் காரணமாக டிராவில் முடிந்தது. இதனால் உலக அளவில் கடும் விமர்சனங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சந்தித்த வேளையில் இந்த தொடரின் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த மார்ச் 21-ஆம் தேதியன்று லாகூரில் தொடங்கியது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.

ஏமாற்றும் ஸ்டீவ் ஸ்மித்:
அதை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் 8/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா ஈடுபட்டார்.
அவருடன் ஜோடி சேர்ந்த நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தன் பங்கிற்கு நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரை சதம் அடித்து அசத்தினார். 3-வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 169 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரிகள் உட்பட 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய உஸ்மான் கவாஜா 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உட்பட 91 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானதால் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழந்த ஆஸ்திரேலியா 232 ரன்கள் எடுத்து 2-வது நாளில் தொடர்ந்து விளையாடி வருகிறது.

சதம் அடிக்கமுடியாமல் திணறும் ஸ்டீவ் ஸ்மித்:
முன்னதாக இந்தப் போட்டியில் 59 ரன்கள் குவித்து அரை சதம் அடித்த போதிலும் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட ஆஸ்திரேலியாவை நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கடந்த ஒரு வருடமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம் அடிக்க முடியாமல் திணறி வருகிறார். கடைசியாக கடந்த ஜனவரி மாதம் சிட்னி மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த அவர் அதன்பின் தற்போது வரை ஒரு வருடங்களுக்கு மேலாக சதம் அடிக்க முடியாமல் திண்டாடுகிறார்.

இத்தனைக்கும் இடையிடையே அரை சதங்களை அடித்து வரும் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த தொடரில் கூட 72, 78 என அரை சதங்கள் அடித்து நல்ல தொடக்கத்தை பெற்ற போதிலும் சதத்தை அடிக்க முடியாமல் தவித்து வருகிறார். அவருக்கு நிகரான மற்றொரு வீரராகக் கருதப்படும் இந்திய கேப்டன் விராட் கோலியும் கடந்த 2 வருடங்களாக ஒரு சதம் அடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். அவரைப் பற்றி தினமும் சமூக வலைதளங்களில் பேசி வரும் அதே ரசிகர்கள் கடந்த ஒரு வருடமாக சதம் அடிக்க முடியாமல் தவித்து வரும் ஸ்டீவ் ஸ்மித் பற்றி பெரிதாகப் பேசுவதில்லை என்பது ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.

உலக கிரிக்கெட்டில் இன்றைய தேதியில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய 4 பேர் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களாக கருதப்படுகிறார்கள். ஏற்கனவே கிரிக்கெட்டில் தங்களின் திறமையை நிரூபித்துள்ள இவர்களை “பேப் 4” என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இதில் ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் வழக்கம்போல சதமடித்து வரும் வேளையில் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சதம் அடிக்க முடியாமல் திணறுவது ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றமடையச் செய்கிறது.

இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்த இருவருமே 27 டெஸ்ட் சதங்களை அடித்துள்ள நிலையில் 28-வது சதத்தை நெருங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். இருப்பினும் அவர்களிடம் உள்ள திறமைக்கு விரைவில் சதம் அடித்து மோசமான கதைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Abdh