கோலியின் தடுமாற்றத்துக்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா -ஓர் அலசல்..!

விராட் கோலியின் பிரச்சினை வெறுமனே ஃபார்ம் மட்டும் அல்ல. ஒரு திருப்திக்காக வேண்டுமானால் ‘ஃபார்ம் அவுட்’ என்று அதற்கு நாம் ஒரு பெயர் சூட்டி ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்.

ஆனால் ஃபார்ம்தான் சிக்கல் என்பதை நிரூபிக்க எந்தவொரு உறுதியான புள்ளியியல் தரவுகளும் இல்லை. இரண்டு வருடங்களாக அவர் சதம் அடிக்கவில்லை என்பதைத் தவிர. சராசரியும் கூட அவ்வளவு மோசமாக குறைந்துவிடவில்லை (38). டாப் ஆர்டர் ஒட்டுமொத்தமாக சொதப்பிய தென்னாபிரிக்க தொடரில் கூட (டெஸ்ட்) இவர் ஓரளவுக்கு தாக்குப்பிடிக்கத்தான் செய்தார்.

உண்மையில் ஃபார்ம்தான் பிரச்சினை என்றால் அதுகுறித்து கவலை கொள்வதற்கு ஒன்றுமில்லை. எப்படி சொல்லாமல் கொள்ளாமல் போனதோ அப்படியே அது இந்நேரம் திரும்ப வந்திருக்கும். உண்மையில் பிரச்சினை இன்னும் ஆழமானது. அதை எப்படியோ உணர்ந்த காரணத்தால்தான் இதனை ஃபார்ம் அவுட் என வர்ணிப்பதை கோலியே ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். ஐபிஎல் தொடர் நடந்த சமயத்தில் விராட் கோலி கொடுத்த பேட்டி ரொம்பவும் முக்கியமான ஒன்று. குறிப்பாக ஃபார்ம் அவுட் பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதில். “உண்மையில் இப்போதுதான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” உண்மையை உணர்ந்ததால் உண்டாகும் மகிழ்ச்சி அது!

கோலியின் பேட்டிங் தேய்மானம் அடைந்து கொண்டுவருகிறது. அவருடைய தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை இப்போது குறைந்து வருகிறது. அல்லது அதற்கு ஈடுகொடுக்கும் உடற்தகுதியை அவர் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார். 33 வயதிலேயே இந்தக் சிக்கல் கோலிக்கு எப்படி வந்தது? முதலில் சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். கோலி ஒரு மேதை அல்ல. அவர் வார்த்தைகளிலே சொல்ல வேண்டும் என்றால் அவர் மெஸ்ஸி அல்ல; ரொனால்டோ. அவர் ஆட்டத்தில் தென்படும் வசீகரம் திரட்டப்பட்ட ஒன்று. ஆட்டத் திறமை உடன் உடலையும் சேர்த்து வளைக்கும் போதுதான் கோலி போன்ற ஒரு சாதாரணர் உச்சத்தை எட்டி முடியும். அதுவும் எப்படிப்பட்ட உழைப்பு? கடந்த 10 வருடங்களாக ஓய்வு இல்லாமல் பேய் போல ஆடி வருகிறார். கூடவே கேப்டன்சி சுமை வேறு.

கோலியின் பேட்டிங் தொழில்நுட்பத்திற்கும் இதில் ஒரு பங்குண்டு. ஒரு பேட்ஸ்மேனாக கோலியின் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க மரபை ஏற்றுக் கொண்டது என சொல்லிவிட முடியாது. அவருடைய Stance சச்சினை அடியொற்றியது. இந்த வகைமை ஸ்டான்ஸை மார்க் நிக்கோலஸ் இப்படி வரையறுக்கிறார். “I believe the ideal stance has the right eye less closed off than in some coaching manuals and level with the left. This means that the head and shoulders will be a little more open than in a perceived classical stance. The hips should be on the same plane as the shoulders, approximately pointing at the non-striker. Then the knees should be flexed and the weight of the body on the balls of the feet.”

கோலியின் Guard பெரும்பாலும் Two legs– மிடில் மற்றும் லெக் ஸ்டம்புகளுக்கு இடையில் Guard எடுத்தல். சமயங்களில் middle– நடு ஸ்டம்பில் இருந்து எடுத்தல். கோலியின் Trigger movementகளில் ஒன்றான Bat Tapping பிராட்மேனால் அறிவுறத்தப்பட்ட ஒன்று. அவருடைய Backlift உம் கூட சச்சினை நினைப்படுத்தக் கூடிய ஒன்றுதான். ஆனால் சில தொழில்நுட்பக் கூறுகள் மரபுக்கு ஒவ்வாதவை அல்லது அதிக கவனம் கோருபவை.

அவருடைய O பேட்டிங் கிரிப்பை எடுத்துக் கொள்வோம். வழக்கமான V கிரிப்பில் இருந்து அது முழுக்கவும் மாறுபட்டது. Bottom Hand–ஐ பிரதானப்படுத்துவது தான் O கிரிப். இதன் மூலம் ஒரு பேட்ஸ்மேன் லெக் சைடில் நினைத்தபடி ரன் குவிக்கலாம். ஆனால் ஆஃப் சைடில் ஸ்கொயர் பகுதியில் பின்னங்காலுக்கு சென்று ஆடுவது கடினம். எக்ஸ்ட்ரா கவர் டிரைவ் ஆடுவதற்கும் சிரமப்பட வேண்டியதிருக்கும். இந்தச் சிக்கலை தனது மணிக்கட்டை கொண்டும் சமயங்களில் தனது பேட்டை கடைசி நேரத்தில் திறந்தும் கோலி சமாளிப்பார். ஆனால் சரியான டைமிங் இல்லாவிட்டால் Bowled, LBW முறையில் ஆட்டமிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்னும் சில விஷயங்கள் உண்டு. கோலியின் பேட்டிங் தொழில்நுட்ப அம்சங்கள் மட்டுமே விரிவாக பார்க்கப்பட வேண்டியது. ஆனால் விஷயம் இதுதான். கோலியால் எல்லாக் காலகட்டத்திலும் இந்த தொழில்நுட்பத்தை (Unorthodox) நம்பியிருக்க முடியாது. வயது கூடக் கூட அதனை நிகழ்த்துவதற்கான துல்லியத்தன்மை மங்கும்.

ஒரு பேட்ஸ்மேனின் ஆகச் சிறந்த காலகட்டமென 29–33 வயது சொல்லப்படுகிறது. இதில் சரிபாதியை கோவிட் ஊரடங்கில் கோலி இழந்துவிட்டார். இடையில் பிசிசிஐ உடன் ஏற்பட்ட மனக்கசப்பு வேறு. கோலி தன்னுடைய கவனத்தை தொலைத்ததில் இவை எல்லாவற்றுக்குமே பங்குண்டு. ஆனால் மறுபடியும் மறுபடியும் ஃபார்ம் அவுட் என்று சொல்லி தேற்றிக் கொள்வதில் நியாயம் இல்லை. ஒவ்வொரு தொடரின் தொடக்கத்திலும் ‘கோலி இந்தமுறை தான் யாரென்று நிரூபிப்பார் பார்’ என்று கட்டியம் கூறுவதில் இனியும் அர்த்தம் இருக்கப்போவதில்லை.

சுனில் கவாஸ்கரே இதுவரை இரண்டுமுறை ( ஐபிஎல் தொடர், தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர்) தவறாக கணித்துவிட்டார். உண்மையில் ஒன்று தொலைந்தால் தானே தேடிக் கண்டடைய முடியும்? ஒரு இயற்கையான சுழற்சியை ஃபார்ம் உடன் போட்டுக் குழப்பிக் கொள்வதால் நேரும் பிழை இது. இப்போதுள்ள ஆட்டத் திறனை வைத்துக் கொண்டே கோலியால் அணியில் இடம்பிடிக்க முடியும். அவ்வப்போது ஓரிரு சதங்கள் கூட அடிக்கலாம். ஆனால் நம்முடைய வழக்கமான எதிர்பார்ப்புகளை மூட்டைக் கட்டி வைத்துவிட வேண்டும். கோலியும் அதை உணர்ந்து கொண்டார் என்றுதான் தோன்றுகிறது.

மேற்சொன்ன பேட்டியில் கோலி ஒரு முக்கியமான விஷயத்தை தொட்டச் செல்கிறார். “I am not finding any self-worth or value in what I do on the field. I’m way past that phase. This is a phase of evolution for me.” கோலியை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு காரவன் இதழில் வைபவ் வத்ஸ் எழுதிய கட்டுரை நினைவுக்கு வருகிறது. ஒரு வருடத்திற்குள் எத்தனைப் பெரும் மாற்றங்கள்? பெரும் லட்சியங்களை மனதில் இருத்திக் கொண்டு களமே வாழ்க்கை என இருந்த கோலி எங்கே? இப்போது தன்னை முன்னகர்த்துவதற்கு தேவையான கதையாடலை உருவாக்கத் தடுமாறும் கோலி எங்கே?

✍️ Dhinesh Akira

YouTube தளத்துக்கு ?