நேற்று பாக்சிங் டெஸ்ட் போட்டியின் முதல் நாள்
ஆஸ்திரேலியாவில் கோண்ஸ்டாஸ் எனும் வலக்கை பேட்ஸ்மேன் தனது 19 வயதில்
பிரதான அணியில் இடம்பெற்று முதல் போட்டியில் விளையாடி
பேட்ஸ்மேன்களின் சிம்ம சொப்பனமாகக் கருதப்படும் ஜஸ்ப்ரிட் சிங் பும்ராவில் பந்துகளில் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் யாரும் அடிக்காத சிக்சர்களை அடித்து தூள் பறக்க ஒட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன் மற்றும் கிரிக்கெட் உலகின் “கோட்” என்று கருதப்படும் விராட் கோஹ்லி
“பாக்சிங் டே”(BOXING DAY) டெஸ்ட் என்பது குத்துச் சண்டை போட்டி என்று தவறாக நினைத்து விட்டார் போலும்…. ( உண்மையில் பாக்சிங் டே என்பது கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள்
ஏழை எளியோருக்கு பெட்டியில்(BOX) நிதியை அளிக்கும் தினம் என்ற பெயரில் வந்தது)
இரு பந்துகளுக்கு இடைப்பட்ட நேரத்தில்
கோண்ஸ்டாஸ் விக்கெட்டின் மறுபுறத்திற்கு செல்லும் போது
பிட்ச்சை விட்டும் தூரத்தில் நின்று கொண்டிருந்த விராட்
அவரது திசையில் இருந்தும் வலது பக்கமாக நடந்து வந்து
கோண்ஸ்டாஸ் நடந்து வந்த திசை நோக்கி வந்து அவரது தோளில் இடிக்கிறார்.
இதை எதற்கு விராட் செய்தார் என்பது குறித்து அவர் தான் விளக்கம் அளிக்க வேண்டும்..
சும்மா ஜாலிக்காக செய்தேன் என்று அவர் கூறினால் அதற்குரிய உடல் மொழி அவரிடம் இருந்து வெளிப்படவில்லை.
மாறாக ஏதோ ஒரு விதத்தில் கோண்ஸ்டாஸை வம்புக்கிழுத்து அவரது கவனத்தைச் சிதறச் செய்து அவுட் ஆக்குவது வியூகமாக(???) இருக்கலாம்.
முதல் போட்டியில் களம் இறங்கியுள்ள கோண்ஸ்டாஸ் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் பும்ராவையே போட்டு பொளந்து கொண்டிருக்க
ஜாம்பவான் நிலையில் இருக்கும் நம்மாளு அவரிடம் வம்புக்கு இழப்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்ளலாம்..?
வாங்க இதுலையும் படிப்பினை இருக்கு…
இது அனைத்துத் துறைகளிலும் இருப்பது தான்.
நாம் ஒருவரை நமது துறையின் ஜாம்பவான் என்றும்
ஆபத்பாந்தவனாகவும் நினைத்துக் கொண்டிருப்போம்.
ஆபத்பாந்தவர்களையும்
ஆதவனைப் போல தூரத்தில் வைத்தே பார்க்க வேண்டும்.
அருகில் சென்று பார்க்க ஆசைப்பட்டால்
நமது எண்ணங்கள் மாறும்.
நாம் அவர் குறித்து செய்து வைத்த கற்பனைகள் அடித்து நொறுக்கப்படலாம்.
அடுத்து
ஒரு துறையில் நீங்கள்
சிறப்பான உழைப்பு
தனித்திறமையை வெளிப்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால்
அந்தத் துறையில் மூத்தோர்கள்/ முன்னோர்கள்/ சாதித்தவர்களுள் சிலர்
உங்களுக்கு ஆறுதல் அளித்து
ஊக்கம் அளிக்கும் முன்னமே
உங்களையும் அவர்களுக்கு சமமான போட்டியாக எண்ணி
உளவியல் ரீதியாக தாக்குதல்களைப் புரியலாம்.
நாம் அவர்களை மேன்மையான நிலையில் வைத்திருக்கலாம்.
ஆனால் அவர்கள் நம்முடைய வருகையை அவர்களுக்குப் போட்டியாக எண்ணும் சூழலே வரும்.
புதிதாக இல்லத்தின் சூழலுக்குள் வரும் மருமகள்களுக்கு மாமியார்கள் வழங்கும் உளவியல் தாக்குதல்களும் இவ்வகையே.
மருமகள்கள் மாமியார்களை “அம்மாக்கள்” ஸ்தானத்தில் வைக்கலாம்.
ஆனால் ஒருபோதும் மாமியார்கள் மருமகள்களை மகள்களாக பாவிக்க மாட்டார்கள்.
இதில் விதிவிலக்கான மாமியார்கள் உண்டு. அவர்கள் அன்பின் பாதையைத் தேர்ந்தெடுத்து அன்பைக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.
அலுவலகத்தில் பெரும் பதவிகளில் இருக்கும் சீனியர்கள்
ஜூனியர்களை நடத்தும் விதத்திலும் இதே பாதுகாப்பின்மை வெளிப்படலாம்.
தன்னை விட உழைக்கும்
தன்னை விட சிந்திக்கும்
தன்னை விட திறமை கொண்ட நபர்
அலுவலகத்துக்குள் இருப்பதை சில மூத்தோரின் கண்களுக்கு அச்சுறுத்தலை வழங்கும் என்பது திண்ணம்.
இந்த எரிச்சல் புகைந்து புகைந்து ஒரு நாள் பொறாமைத் தீயை மூட்டி அதில் குளிர் காயும் நிலை இருக்கும்.
மட்டம் தட்டுதல்
தவறுகளை ஊதிப் பெரிதாக்குதல்
நேரடி/ மறைமுக உளவியல் தாக்குதல்கள்
இன்னும் இந்தத் தீ உச்சம் அடைந்தால்
உடல் ரீதியான தாக்குதல்களும் வரும்.
இவையெல்லாம் ஒவ்வொருவரும் கடந்து வரும் வாழ்க்கை சுழற்சியே ஆகும்.
இதிலும் விதிவிலக்கான மூத்தோர்கள் / சீனியர்கள் உண்டு.
அவர்கள் தங்களின் ஜூனியர்களைக் கனிவுடன் நடத்தி அன்பு பாராட்டி
வேலையைப் பகிர்ந்து
ஊக்குவித்து அனுபவங்களைக் கற்றுக் கொடுப்பார்கள்.
இவர்கள்
சிலர் அசுரன் படம் போல
தனக்குப் பிறர் செய்ததை தான் முன்னேறிய பின் செய்யாமல் இருக்கிறார்கள்
இன்னும் சிலர்
விடுதலை-2 போல
தான் முன்னேறி ஒரு இடத்துக்கு வந்ததும்
தனக்கு செய்யப்பட்டவற்றை பிறருக்கும் பாரபட்சமின்றி செய்கிறார்கள்.
இதே தான்
மாமியார் மருமகள்கள் கதையிலும்
சீனியர் ஜூனியர் கதையிலும் நிகழ்கிறது
ஒரு மாமியார் அவர் மருமகளாக இருக்கும் போது அனுபவித்த துன்பங்களை
தனது மருமகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுப்பதும்
வேண்டாம்.. நான் பட்டதை எனது மருமகள் படக்கூடாது என்று எண்ணுவதும்
மருமகள்கள் கையில் இல்லை
அது மாமியார்கள் எடுக்கும் முடிவு
அதே மாதிரி
அலுவலகங்களில்
தனது சீனியர்கள் தனக்கு செய்த டார்ச்சர்களை வட்டியும் முதலுமாக ஜூனியர்களுக்கு வழங்குவேன் என்று சீனியர் முடிவு செய்வதும்
வேண்டாம்.. நான் எனது ஜூனியர்களுக்கு நான் அனுபவித்த துன்பங்களைத் தரமாட்டேன் என்று முடிவு செய்வதும்
ஜூனியர்களைப் பொருத்தது அன்று
அது சீனியரின் மனநிலை பொருத்தது.
இதில் இருந்து என்ன தெரிகிறது?
விளையாட்டோ ..
குடும்பமோ..
அலுவலகமோ …
அனைத்திலும்
“சீனியர்கள்” எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொருத்தே
அமைதியும் வெற்றியும் அமைகிறது.
என்னைப் பொருத்தவரை
கணியன் பூங்குன்றனார் உரைத்தது தான்
எனக்கான சிந்தனை…
“நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே..”
இதுவரைக்கும் வாழ்ந்து முடித்தவர்கள்
கதைகளில் இருந்து அறிந்து கொண்டது..
இந்த உலக வாழ்க்கை என்பது
ஆற்றில் செல்லும் தெப்பம் போல
என்பதை உணர்ந்தவர்கள்…
யாரையும் ஆபத்பாந்தவனாக எண்ணி வியத்துலும் வேண்டாம்…
யாரையும் சிறார் எண்றெண்ணி இகழவும் வேண்டாம்…
இளையோராக மூத்தோரால் இகழப்படுவதும்
முதிர்ந்த பின் இளையோரால்
இகழப்படுவதும் சுழற்சி…
இந்த சுழற்சியை சரிசெய்து திருத்தும் மருந்து அவர் அவரிடமே இருக்கிறது
அது தான் “அன்பு”
அன்பெனும் மருந்தை முதலில் மூத்தோர் இளையோருக்கு அளிக்க வேண்டும்.
பின்பு சுழற்சியில் அன்பே மீண்டும் கிடைக்கும்.
இந்த சுழற்சியின் இயற்கையை உணர்ந்து கொண்டால் என்றும் நிம்மதியே..
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை