கோலி அரைசதம் அடித்த உடன் நடந்த சம்பவம்.. நொந்து போன அனுஷ்கா சர்மா.. என்ன நடந்தது?
2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இலக்கை துரத்திக் கொண்டிருந்தபோது விராட் கோலி அரை சதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் அதிரடியாக ஆடிவந்த போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வேகமாக வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது.
12வது ஓவரில் அவேஷ் கான் வீசிய பந்தில், ஆயுஷ் பதோனியிடம் கேட்ச் கொடுத்து விராட் கோலி ஆட்டமிழந்தார். அப்போது அவர் 30 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தார். இது அவரது 63வது ஐபிஎல் அரை சதமாக அமைந்தது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக அரை சதம் அடித்த வீரராக விராட் கோலி சாதனை படைத்தார்.
இந்த அரை சதத்தின் போது விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தார். ஆனால், அதற்கு அடுத்த சில பந்துகளிலேயே விராட் கோலி ஆட்டமிழந்தார். அதைப் பார்த்து மனம் துவண்டுபோனார் அனுஷ்கா சர்மா. ஏமாற்றத்துடன் தனது ஆதங்கத்தை அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் வெளிப்படுத்தினார். அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் 61 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்திருந்தார்.
அடுத்து ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில், விராட் கோலி 54 ரன்களும், மயங்க் அகர்வால் 41 ரன்களும், ஜிதேஷ் சர்மா 33 பந்துகளில் 85 ரன்களும் அடித்தனர். இதையடுத்து, 18.4 ஓவர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி இலக்கை எட்டியது. ஆறு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்திருக்கும் நிலையில், இனி இந்திய ஒருநாள் அணியிலும், ஐபிஎல் தொடரிலும் மட்டுமே விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.