சக்கர நாற்காலியில் ராகுல் டிராவிட்.. பதறிப் போன வீரர்கள்.. என்ன நடந்தது?
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளரும், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராகவும் இருக்கும் ராகுல் டிராவிட் சக்கர நாற்காலியில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படும் அவர் மைதானத்திற்கு சக்கர நாற்காலியில் வந்தார். இந்த காட்சியை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது. இந்தப் போட்டி கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற உள்ளது.
அதற்காக இரு அணி வீரர்களும் அங்கு பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களை மைதானத்தில் ராகுல் டிராவிட் சந்தித்தார். அப்போது அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது. கர்நாடக மாநில கிரிக்கெட் அமைப்பின் லீக் தொடர் ஒன்றில் விஜயா கிரிக்கெட் கிளப் என்ற அணிக்காக விளையாடி இருக்கிறார் ராகுல் டிராவிட். அந்தப் போட்டியில் விளையாடிய போது அவரது இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரால் நடக்க முடியாத அளவுக்கு அது மோசமானதாக இருந்தது.
எனினும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களுடன் ஆலோசகராக உடன் இருக்க வேண்டும் என்பதால் அவர் தற்போது காலில் நடப்பதற்கு உதவி செய்யும் உபகரணங்களை அணிந்து கொண்டு சக்கர நாற்காலியில் ஐபிஎல் தொடரில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். அவரது அர்ப்பணிப்பு உணர்வை பலரும் சுட்டிக்காட்டி பாராட்டி வருகின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் ஆடிய முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வியடைந்தது. அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது அந்த அணி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனும் காயத்தில் சிக்கியிருக்கிறார். அவர் முதல் மூன்று போட்டிகளில் விக்கெட் கீப்பராக பங்கேற்க முடியாததால் கேப்டன் பதவியை ரியான் பராக் வசம் வழங்கியிருக்கிறார். ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டும் ஆடி வருகிறார். ரியான் பராக் முதல் மூன்று போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக செயல்படவுள்ளார்.
செய்தி சுருக்கம்:
ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகர் ராகுல் டிராவிட் சக்கர நாற்காலியில் பங்கேற்றுள்ளார்.
கர்நாடக லீக் போட்டியில் ஏற்பட்ட கால் காயத்தால் அவர் சக்கர நாற்காலியில் உள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை கவுஹாத்தியில் சந்திக்கவுள்ளது.
ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் விளையாடவில்லை.
ரியான் பராக் முதல் மூன்று போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படவுள்ளார்.