சச்சின் என்னும் சகாப்தம்!!!!!
21 வீரர்கள்,
22 யார்டு,
24 வருடங்கள் ;
ஒரு யுகத்துக்கான நினைவுகள்…..
வானம் பார்த்த பூமியில்,
வார்த்தெடுக்கப்பட்டவர்களையும்,
உன் பேட் பேசிய பாஷையால்,
கிரிக்கெட்டைக் காதலிக்க
வைத்தவன் நீ!!!!
கிளப்புகளுக்கே உரிய கிரிக்கெட்டை,
கிடாரிபட்டிகளுக்கும் கொண்டு
சேர்த்தவன் நீ!!!!!!
வேறுபாடுகளால் பிளவுபட்ட மனங்களை,
மதம் – கிரிக்கெட்,
கடவுள் – சச்சின் எனச் சொல்லவைத்து,
ஒற்றைக்கூட்டுக்குள் கட்டிப்போட்டவன் நீ!!!!!
ஒலியும் ஒளியும் மட்டும்
ஒலித்துக் கொண்டிருந்த வீடுகளில்,
கிரிக்கெட் கமெண்டரியையும்,
கேட்க வைத்தவன் நீ!!!!!!
பண்டிகை நாட்களைக்
பரவசமாய்க் கொண்டாடியதைவிட,
உனது சதங்களையும் சாதனைகளையும்,
நாங்கள்,
சிறப்பித்த தருணங்களே அதிகம்!!!!!
ஆஸ்திரேலிய பௌலர்களை நீ
அல்லோலப்பட வைத்ததையும்,
சிட்னி மெல்போர்னை,
சின்னாபின்னமாக்கி வெற்றிவாகை
சூடியதையுமெல்லாம்,
விழித்திரையல்ல,
மனத்திரையில் மாட்டி வைத்திருக்கிறோம்!!!!!!
பந்து வந்து பேட்டைத் தொட்டு,
காதல்மொழி பேசும் முன்பே,
அதுவரும் விதம்,
எழும்பும் உயரம்,
திரும்பும் திசை,
அத்தனையும்
முன்கூட்டி அறியும்,
தீர்க்கதரிசி நீ!!!!!!
டெஸ்டோ ஒருநாளோ,
ஒருநாளும்,
உன்னை டெஸ்ட் செய்ததில்லை!!!!!
உள்நாடோ, அயல்நாடோ – உன்
ஆட்டத்திறன் அணுவளவும்,
ஆட்டங் கண்டதில்லை!!!!!
வேகப்பந்தை விவேகமாய் எதிர்கொண்டால்,
சுழல்பந்தோடு, பௌலரையும்,
சேர்த்தே சுத்தலில் விடுவாய்!!!!!!
பந்தோடு விரல்வித்தை பேசி,
ஆஃப் ஸ்பின்னராய்,
லெக் ஸ்பின்னராய்,
இருவேறு அரிதாரம் தரிப்பாய்,
என்ன நடந்தாலும்,
இறுதியில்,
மேட்ச் வின்னர்,
நீ மற்றும் நீ மட்டுமே!!!!!!
இக்கட்டான தருணங்களில்,
இறங்கி நீ வந்தாலும்,
திக்கெட்டும் பந்துகளைப்
பறக்க வைப்பாய்,
இந்தியாவை மீட்டெடுப்பாய் !!!!!
பசிபிக் கடலின் மறுகரையோ,
இந்தியக்கடலின் அப்பாலோ,
உன்னைக் கொண்டாடி, நீ
விளையாடிய ஆட்டங்களின் யூடியூப்
வீடியோக்களால்,
கிரிக்கெட் கற்றுக் கொள்வோர்,
இன்றைக்கும்,
எத்தனையோ ஆயிரம்!!!!!
கிளாசிக்கல் கிரிக்கெட்டின்
காவலன் நீ!!!!!
மாடர்ன் கிரிக்கெட்டின்,
மகத்துவன் நீ!!!!!
பேட்ஸ்மேனுக்கு எதிராக,
பௌலிங் வேரியஷன்களோடு
பௌலர்கள் புறப்பட்டு வருவதைப்போல்,
பௌலருக்கென்று வகைவகையாய்
ஷாட்களை வாரித்தரும் வள்ளல் நீ!!!!!!
அக்தருக்கு Upper Cut,
அக்ரமுக்கு Square Cut,
முரளிதரனுக்கு Late Cut,
மலிங்காவிற்கு Fine Leg,
ஸ்டெயினுக்கு Cover Drive,
வக்கார் யூனிஸுக்கு Extra Cover Drive,
என் ஒவ்வொருவராய்,
தனித்தனியாக கவனித்தனுப்பும்,
விருந்தோம்பல்,
உன்னைத்தவிர யாரிடமுள்ளது!!!!!
டிஆர்எஸ், பேட்டிங் பவர்பிளே என
எக்ஸ்ட்ரா ஆக்ஸஸரிஸ்,
இரண்டடுக்குப் பாதுகாப்பை,
பேட்ஸ்மென்களுக்கு
வாரிவழங்காத காலத்திலேயே,
முப்பதாயிரம் ரன்களை,
முழுமூச்சாய்க் கடந்தவன் நீ!!!!!
‘அவுட் இல்லை’ எனத் தெரிந்தாலும்,
அம்பயரிடம் ஆர்க்யூ செய்ததில்லை!
வம்பிலுக்கிறார்கள் என்றாலும்,
எதிரணியுடன் முட்டிக் கொண்டதில்லை!
உன் பாணியில் பதில் சொல்வாய்,
வன்சொற்களால் அல்ல,
ரன்சொற்களால் ……
எல்லைகள், காலம் கடந்தவன் நீ!!!!!
எட்டவேண்டிய இலக்கு
என்னவாக இருந்தாலும்,
எதிரி யாராக இருந்தாலும்,
கண்களில் பயமோ,
முகத்தில் மிரட்சியோ,
பேருக்குக்கூடக் காட்டியதில்லை!!!!!!
ஒவ்வொரு வருடமும், உனது
அப்டேட்டட் வெர்ஷனாக நீ,
அவதாரம் எடுத்ததால்தான்,
மூன்று தலைமுறைகளையும்,
தாண்டியும் நிற்கின்றாய்.
கண்ணில் ஒத்திக்கொள்ள
வைக்கும் உனது
ஒவ்வொரு ஷாட்டையும்,
ஓராயிரம்முறை முயன்ற ஏகலைவர்களில்,
நானும் ஒருவன்!!!!!
எங்கள் துரோணர் நீ!!!!
எனினும்,
அசலின் அருகேகூட
நகல்களால் நகர முடியாது!!!!!
உனது ஒவ்வொரு
இன்னிங்ஸுகளும் எங்களை,
கொண்டாட வைத்திருக்கின்றன,
மகிழ வைத்திருக்கின்றன,
கற்றுக்கொள்ள வைத்திருக்கின்றன,
உணர்ச்சியின் உச்சத்தில்
அழக்கூட வைத்திருக்கின்றன,
எங்கள் நினைவுப்பெட்டகங்களை
அலங்கரிக்கும்,
அழகிய ஆபரணங்கள் அவை!!!!!!
கிரிக்கெட்(டின்) காதலனே,
உன்னை நீக்கின்,
இந்தியக் கிரிக்கெட் பக்கங்கள்,
வெள்ளைக் காகிதகமாகவே,
விளங்கி இருக்கும்!!!!!
எங்கள்
ஒட்டுமொத்தக் கனவுகளையும்
தூக்கிச் சுமந்த,
சுமைதாங்கி நீ!!!!!!
சுகமான சுமையை,
இறக்கி வைத்து நீ
ஓய்வெடுத்த தருணம்,
இந்தியா மொத்தத்தையும்
உனக்காய்,
உணர்வுப் பெருக்கில்,
கண்ணீர்விட வைத்தவன் நீ!!!!!
சச்சின் என்னும் நான்கெழுத்து
மந்திரத்தால்,
உலகக்கிரிக்கெட்டின்,
ஒட்டுமொத்த லகானையும்,
லாவகமாகப் பிடித்திருந்தது இந்தியா!!!!!
எத்தனைமுறை உன்னை,
எழுதித் தீர்த்தாலும்,
இன்னமும்
ஏதோ மிச்சமிருக்கின்றது,
உன் புகழ் சொல்ல…..
உன் ரன்களின் எண்களை,
இன்னொருவர் கடக்கலாம்,
நீ செய்த
சாதனைகள் முறியடிக்கப்படலாம்,
ஆனாலும்,
சச்சின் என்ற சகாப்தத்தின்,
நிழலைக்கூட இன்னொரு
நிஜத்தினால் சமன்செய்ய முடியாது!!!!
ஆம்!!!!!!
சரித்திரம் பேசிக் கொண்டிருக்கும்
சகாப்தம் நீ!!!!!!
உனக்கு இணை நீ மட்டுமே,
நிகழுலகத்திலும்,
இணை உலகத்திலும்!!!!!!
கிரிக்கெட் இருக்கும்வரை நீ இருப்பாய்!!!!!
#அய்யப்பன்