சச்சின் – விராட் – பாபர்..!

சச்சின் – விராட் – பாபர்..!

சச்சின் காலத்தை விட விராட்கோலியின் காலத்தில் பந்துவீச்சாளர்களின் துல்லியம் (accuracy) அதிகரித்திருக்கிறது.

ஒரு பந்துவீச்சாளர் ஒரு பேட்ஸ்மேனை வீழ்த்துவதற்காகப் புதுவித முயற்சிகளை மேற்கொள்வதில்லை. உதாரணமாக, சுழற்பந்து வீச்சாளர்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் விக்கெட்டிற்காக விக்கெட் கீப்பரை கூட எதிர்பார்ப்பதில்லை. போல்ட், எல்.பி.டபிள்யூ முறைகளில் விக்கெட்டு வீழ்த்துவதற்குதான் அதிகம் வீசுகிறார்கள். விக்கெட்டிற்காக பீல்டர்களை பெரிதும் சாராமல் வீசுவதால், பேட்ஸ்மேனுக்கும் பந்துவீச்சாளருக்கும் நடுவில் நடக்கும் உளவியல் யுத்தம் ஒரு சலிப்பானதாகத்தான் அமைகிறது.

பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பிராய்லர் கோழியைப் போலத்தான் வளர்த்தப்படுகிறார்கள். நடராஜன் ஆறு பந்துகளையும் யார்க்கர் வீசுகிறார். அஷ்வினை தவிர்த்துப் பார்த்தால் கிரிக்கெட் உலகத்தில் தற்போது ஒரு முழுமையான ஆப்-ஸ்பின்னரே கிடையாது என்பதெல்லாம் இதற்கான உதாரணங்கள். கிரிக்கெட் நவீனமாக ஆக, எதெது தேவை? தேவையில்லை? என்று 101% துல்லியமாக கழிக்க ஆரம்பித்ததால், கிரிக்கெட் அதன் உண்மையான கவர்ச்சியை இழந்திருக்கிறது.

சரி விசயத்திற்கு வருவோம், சச்சின் காலத்திற்கு அடுத்து பந்துவீச்சாளர்களின் துல்லியம் அதிகரித்தது. டெஸ்ட் போட்டியைக் காப்பதற்காக, ஆட்டங்களில் முடிவு காண, ஆடுகளங்கள் தரமாக அமைக்கப்படுகின்றன. இது பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகளில் ரன் குவிப்பை கடினமாக்கி இருக்கிறதென்று கூறலாம். சச்சின் இந்தக் காலத்திலும் ரன்கள் குவித்தார் என்பது வேறுகதை.

ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட் சச்சின் காலத்திற்குப் பிறகு எப்படி மாறியிருக்கிறது என்றால், பந்துவீச்சாளர்களின் துல்லியத்தால் கூட எந்தவித நெருக்கடியையும் பேட்ஸ்மேன்களுக்கு உருவாக்காத வகையில், 300 பந்துகளுக்கு 300 ரன்கள் என்பதெல்லாம் அதன் உண்மையான மதிப்பை இழந்திருக்கிறது.

காரணம், இரு முனைகளிலும் இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுவதும், 10-40 ஓவர்கள் வெளிவட்டத்தில் நான்கு பீல்டர்களை மட்டுமே அனுமதிப்பதும் தாண்டி, ஒருநாள் போட்டிக்கான ஆடுகளங்களிலிருத்து 90% உயிரை எடுத்து விடுவதும்தான்.

இரண்டு முனைகளில் புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதால், பந்து பேட்டிற்கு எளிதாய் வருவதும், இதனால் ரிவர்ஸ் ஸ்விங் கட் ஆவதும், பந்தின் நிறம் பெரிதாய் மாறாததால் எளிதாய் கவனிக்க முடிவதால், 10-40 ஓவர்கள் வெளியில் நான்கு பீல்டர்கள் என்பது, பவுண்டரிகளை எளிதாய் கொண்டுவர முடிவதும், இதில் ஆடுகளம் உயிரற்றுக் கிடப்பதும், ஒருநாள் போட்டிகள் உண்டாக்கிய பரவசத்தைப் பறித்திருக்கின்றன.

யோசித்திருக்கிறிர்களா? உலகக்கோப்பை தொடர்கள் முன்பு உருவாக்கிய பழைய பரசவங்களை, எதிர்பார்ப்புகளை, கொண்டாட்டங்களை உருவாக்குவது இல்லையென்று!

தற்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலையோ இல்லை ஏதாவது சாதனை புள்ளிவிபரங்களை பார்த்தால், அதன் மீது பெரிய வியப்பெல்லாம் உருவாவது இல்லை. இதன் அர்த்தம் விராட்டோ, பாபரோ திறமையற்றவர்கள் என்பதல்ல, போட்டிகள் தரமற்றதாக இருக்கிறது என்பதே!