சச்சின் 49 ❤️

90 இறுதிக் காலகட்டத்தில்/2000 ஆரம்பக் காலகட்டங்களில் விடுமுறை நாள்களில், பெரும்பான்மையான ஊர்கள் முழுவதும், கிரிக்கெட் டோர்ணமெண்ட் நடத்துவார்கள்.

ரப்பர் பால், டென்னிஸ் பால், கார்க் பால், லெதர் பால் என பல வகையான போட்டிகள் ஊரில் நடத்தப்படும்; அவரவர் வசதிக்கு ஏற்பக் கிடைக்கும் வாய்ப்புகளுக்கு ஏற்ப, அந்தந்த தொடரில் விளையாடச் சென்று கொண்டிருப்பார்கள்.

சில சமயம் போட்டிகள் கிராமங்களில் நடத்தப்படும, ஊரில் இருந்து சைக்கிள் மிதித்துதான் செல்ல வேண்டும், ஒவ்வொன்றும் குறைந்தது 10 கிலோமீட்டர் தூரம் இருக்கும். பஸ்ஸில் செல்ல, வீட்டில் காசு வாங்க முடியாது, கேட்டால் திட்டு விழும் என்பதற்காகவே சைக்கிள் மிதித்த நாள்கள் பல.

அந்த சைக்கிள் மிதித்துச் செல்லும்போது எல்லாம், அந்தச் சிறுவர்கள் இன்னிக்கு எப்படி விளையாடப் போகிறோம், தனது அணி என்ன செய்யப் போகிறது, எந்த மாதிரியான ஷாட்களை ஆட வேண்டும், எந்த மாதிரி பௌலிங் செய்தால், எதிரணி பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என அவர்களுக்குள் பேசிக்கொண்டே செல்வார்கள்.

அந்தச் சிறுவர்களுக்கு போட்டி இடைவெளியின் போது சாப்பாடு எல்லாம் கிடைக்காது, சைக்கிள் வண்டியில் வைத்து எடுத்து ஐஸ் பெட்டிக்காரர் விற்கும் 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் ஐஸ் குச்சிகள்தான் சாப்பாடு, அதைச் சுவைத்து விட்டு, சுட்டெரிக்கும் வெயிலில் மீண்டும் கிரிக்கெட் ஆட இறங்கி விடுவார்கள்.

போட்டி தொடங்குவதற்கு முந்துன நாள் நைட்டு சரியான தூக்கமே வராது. மறுநாள் காலை போட்டியில் என்ன செய்யபோகிறோம் என்ற ஆர்வம் தொற்றிகொள்ளும். எப்போதுடா மணி காலை 6 ஆகும் எப்போது கிரவுண்ட்டுக்கு சைக்கிள் எடுப்போம் என்ற ஆர்வம்தான் கண்கள் முழுக்க நிறைந்திருக்கும்.

காலையில் ஆரம்பிக்கும் விளையாட்டு, சாயங்காலம் வரை அடுத்தடுத்து தொடரும். பசி கிடையாது, சரியான தூக்கம் கிடையாது ஆனால் கிரிக்கெட் ஆடும்போது அது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ஏன் ஒரு சாதாரண விளையாட்டுக்கு பல கோடி சிறுவர்கள் இவ்வளவு ஆர்வமாக விளையாடக் கிளம்புகிறார்கள். பசி மறந்து, தூக்கம் மறந்து, அவர்களைக் கிரிக்கெட் ஆடத் தூண்டிய விஷயம்தான் எது?

இந்தக் கேள்விக்கான விடையை அந்த சிறுவர்களிடம் கேட்டால், அவர்கள் சொல்லும் ஒரே பதில் ‘சச்சின்’. ஒவ்வொரு சிறுவனும் MRF ஸ்டிக்கர் பதித்த பேட்டை கையில் ஏந்தும்போது, தன்னை சச்சினாகவேதான் நினைத்தான். அவர் மாதிரியே தானும் நன்றாக விளையாடி ஒருநாள் தனது உள்ளூர் அணியில் போட்டியில் ஜொலிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பே.

அந்த எதிர்பார்ப்புதான் பல கோடி சிறுவர்களை கிரிக்கெட் போட்டிகள் ஆட உந்துகோலாக இருந்தது. அவர்களுக்குத் தெரியும் தன்னால் அடுத்தடுத்த லெவலுக்கு செல்ல முடியாது என்று. இருந்தும் அவர்கள் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் ஆடச் சென்றது, தான் ஆடும் ரப்பர்/டென்னிஸ்/கார்க்/லெதர் பால் போட்டிகளில், தனது அணியின் சச்சின் என்று பெயர் வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பு தான்.

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாக உருவாக ஆரம்பித்தபோது அந்த மதத்தில் வணங்குவதற்கு ரசிகர்களே விரும்பித் தேர்ந்தெடுத்த கடவுள்தான் அவர்.

கவாஸ்கரிடம் “வரும்காலத்தில் சச்சினுக்கு எது மிகப்பெரிய சவாலாக இருக்கபோகிறது?”, என்ற நிருபர் கேட்ட கேள்விக்கு, “சச்சின் ஃபாஸ்ட் பௌலிங் எல்லாம் சமாளிச்சு ஆடிவிடுவார், ஆனால் ஒவ்வொரு தடவையும் இந்திய மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது தான் அவருக்கு மிகப்பெரிய சவாலா இருக்கும்”, என்றார்

கவாஸ்கர் சொன்ன மாதிரி சச்சின் ஆடிய 24 வருஷமும், மக்கள் அவர் சதம் அடிப்பாரா என்று எதிர்பாத்துகிட்டேதான் இருந்தாங்க, அவரும் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்காமால், சதம் அடிச்சிகிட்டேதான் இருந்தார், இன்றைக்கு இருக்கும் மன அழுத்தம், ஸ்ட்ரெஸ் என பல வகையான சொற்றொடர்கள் எல்லாம், அப்போது அவரின் தலையில் பெரிய பாரமாகத் தூக்கி வைக்கப்பட்டது.

தன் மேல் விழுந்த பாரத்தை சுமையாகக் கருதாமல், சுகமாகக் கருதியால்தான், அவரால் அத்தனை போட்டிகளில் தொடர்ந்து விளையாடவும் முடிந்தது, ரசிகர்களை மகிழ்விக்கவும் முடிந்தது.

ஒரு பக்தன் கோவிலுக்குச் சென்று பல வகையான வேண்டுதல்களை கடவுள் முன் வைத்துவிட்டு வருவான், அதில் ஒரு வேண்டுதல் நிறைவேறினால்கூட, கடவுள் தனக்கு அருள் பாலித்துவிட்டார் என்று அவன் அடையும் மகிழ்ச்சிக்கு அளவீடு கிடையாது. அதேபோல்தான் கிரிக்கெட் மதத்தில், அவர் முன் வைக்கப்பட்ட, பல வகையான கோரிக்கைகளுக்கு அவரும் தன்னால் முடிந்ததைச் செய்து கொண்டே வந்து தனது ரசிகனை சந்தோஷப்படுத்தி கொண்டே வந்தார்.

கிரிக்கெட்டே காதலித்த இந்தியக் கிரிக்கெட்டர் சச்சின்தான். கிரிக்கெட் மீதான அவரது அளவில்லா நேசம், சாதனைகள், சகல அணிகளுக்கும் சவாலாக ஆண்டுக்கணக்கில் நீடித்தது, எல்லாவற்றையும் தாண்டி, அடுத்த தலைமுறையின் மூளைக்குள் கிரிக்கெட் பசியையும் வேட்கையையும், அதுகுறித்த நம்பிக்கையையும் ஏற்படுத்தியதுதான், அவரது உச்சகட்ட சாதனை.

#அய்யப்பன்