சஞ்சு சாம்சன் செய்த வேலைக்கு மாநில அணியில் கூட இடமில்லை.. ஒரு வரி மெசேஜால் வாய்ப்பு போச்சு

சஞ்சு சாம்சன் செய்த வேலைக்கு மாநில அணியில் கூட இடமில்லை.. ஒரு வரி மெசேஜால் வாய்ப்பு போச்சு

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் சஞ்சு சாம்சனுக்கு மாற்று விக்கெட் கீப்பராக இடம் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டு இருந்தார். சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை? என்பது பற்றி கேரள மாநில கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஜெயேஷ் ஜார்ஜிடம் கேட்கப்பட்டது.

அப்போது அவர் சஞ்சு சாம்சன் செய்த செயல் ஒன்றை பற்றி விவரித்தார். அதனால் அவருக்கு மாநில அளவிலான ஒரு நாள் அணியிலும் இடம் மறுக்கப்பட்டதாக அவர் தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் தேசிய அளவிலான ஒரு நாள் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்றது. அந்த தொடரில் கேரளா அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை.

அந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடவில்லை என்றால் அவருக்கு இந்திய ஒரு நாள் அணியிலும் இடம் அளிக்கப்படாது என அப்போது பேச்சு எழுந்தது. கேரள மாநில கிரிக்கெட் அமைப்புக்கும், சஞ்சு சாம்சனுக்கும் இடையே இருக்கும் மோதலால் தான் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனவும் பேசப்பட்டு வந்தது.

அந்த விவகாரத்தில் கேரள மாநில கிரிக்கெட் அமைப்பின் தரப்பு குறித்தும், சஞ்சு சாம்சன் நடந்து கொண்ட விதம் குறித்தும் ஜார்ஜ் விவரித்து இருக்கிறார். “சஞ்சு சாம்சனுக்கு எதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை என என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், அவர் விஜய் ஹசாரே டிராபி தொடரில் ஏன் விளையாடவில்லை? என்பதற்கான காரணம் இதுதான். நாங்கள் விஜய் ஹசாரே தொடருக்கு முன் 30 வீரர்களுக்கான பயிற்சி முகாமை நடத்தினோம்.”

“அப்போது சஞ்சு சாம்சன் “நான் பங்கேற்க தயாராக இல்லை” ஒரு வரியில் மெசேஜ் அனுப்பினார். நாங்கள் அனைவரும் அவர்தான் அந்த தொடரில் கேப்டனாக செயல்படுவார் என நினைத்துக் கொண்டு இருந்தோம். ஏனெனில், அவர் தான் கேரளா அணியின் குறைந்த ஓவர் போட்டிகளின் கேப்டனாக இருந்து வருகிறார். சையது முஷ்டாக் அலி டி20 தொடரிலும் அவர்தான் கேப்டனாக செயல்பட்டார்.”

“அவர் அனுப்பிய ஒரு வரி மெசேஜால் நாங்கள் அவர் இல்லாத அணியை அறிவித்தோம். அப்போது அவர் மீண்டும் தான் விளையாட தயாராக இருப்பதாக ஒரு வரியில் மெசேஜ் அனுப்பினார். சஞ்சு சாம்சனோ அல்லது எந்த ஒரு வீரரோ கேரளா கிரிக்கெட் அமைப்புக்கு என சில விதிகள் உள்ளன. அவற்றை நாம் மதிக்க வேண்டும்.”

“சஞ்சு சாம்சனுக்கு பயிற்சி முகாம் வேண்டாம். ஆனால், மாநில அணியில் அவர் நினைக்கும் போது மட்டும் வந்து விளையாட முடியுமா? அவர் எப்படி இந்திய அணியை அடைந்தார். கேரளா கிரிக்கெட் அமைப்பின் மூலம் தான் இந்திய அணியில் விளையாடி வருகிறார். அதற்காக நீங்கள் விருப்பப்பட்ட போது கேரளா அணிக்காக விளையாடலாம் என நினைக்க முடியாது.” என்றார் ஜார்ஜ்.