2024 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மிட்செல் சான்ட்னர் ஃபீல்டிங்கில் செய்த சொதப்பலால் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கோபம் அடைந்தார். ரவீந்திர ஜடேஜாவின் ஓவரில் அவர் செய்த ஓவர் த்ரோவால் கூடுதல் ரன்கள் கிடைத்தது. அதைப் பார்த்த ஜடேஜா நொந்து போனார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசியது. சிஎஸ்கே அணையில் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களான தீபக் சாஹர், பதிரானா மற்றும் முஸ்தாபிசூர் ரஹ்மான் இல்லாத நிலையில் அந்த அணி பந்துவீச்சில் தடுமாறியது.
இந்த போட்டியில் குஜராத் அணியின் துவக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் கூட்டணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் திணறியது. ரவீந்திர ஜடேஜாவின் ஓவரில் சாய் சுதர்சன் பேட்டிங் செய்து வந்தார். அவர் பந்தை டீப் ஸ்கொயரை நோக்கி அடித்து விட்டு இரண்டு ரன்கள் ஓடினார்.
அப்போது பந்தை எடுத்த மிட்செல் சான்ட்னர் வேகமாக வீசினார். பந்து ஜடேஜாவை தாண்டி மறுபக்கம் நின்றிருந்த ரச்சின் ரவீந்திராவை நோக்கி சென்றது. பந்தை பிடிக்க முடியாத அளவுக்கு கூடுதல் தூரம் சென்று பந்து பிட்ச் ஆனது. ரச்சின் ரவீந்திரா பந்தை பிடிக்க முயன்று தவற விட்டார். இதை அடுத்து பந்து எளிதாக பவுண்டரி கோட்டை தாண்டியது. இதனால் குஜராத் அணி எடுத்த இரண்டு ரன்கள் போக கூடுதலாக நான்கு ரன்கள் அந்த அணிக்கு கிடைத்தது.
சான்ட்னர் செய்த செயலை பார்த்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கோபமடைந்தார். எனினும் அதை வெளிப்படுத்தாமல் அவரை முறைத்து பார்த்துவிட்டு சென்றார். ஏற்கனவே அதிக ரன்கள் கொடுத்ததால் பதற்றத்தில் இருந்து ஜடேஜா மேலும் நான்கு ரன்கள் சென்றதால் நொந்து போனார். அந்த ஓவரில் மட்டும் 14 ரன்கள் சேர்த்தது குஜராத் அணி. குஜராத் அணி இந்தப் போட்டியில் 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 160 ரன்கள் குவித்து இருந்தது.