சிஎஸ்கே மேட்ச்சில் ஜெயிச்சுருக்கலாம்.. இப்ப பிளே ஆஃப் போச்சு..KKR-ஐ விளாசிய ஆரோன் பின்ச்

சிஎஸ்கே மேட்ச்சில் ஜெயிச்சுருக்கலாம்.. இப்ப பிளே ஆஃப் போச்சு..KKR-ஐ விளாசிய ஆரோன் பின்ச்

2025 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த நான்காவது அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இணைந்து இருக்கிறது. இந்த நிலையில், முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் எல்லாம் அந்த அணி தோல்வி அடைந்ததாக அவர் விமர்சனம் செய்திருக்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 129 ரன்கள் எடுத்தது. அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய போது, பல வாய்ப்புகளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தவற விட்டது. அதை பயன்படுத்திக்கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

அது குறித்துப் பேசிய ஆரோன் பின்ச்: “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவர்களை அவர்களேதான் குற்றம் சுமத்திக் கொள்ள முடியும். அவர்களேதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவினார்கள். அந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்தப் போட்டியில் அவர்கள் வெற்றிக்கு மிக அருகே வந்தார்கள் ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை. அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகச்சிறந்த வெற்றியாக அமைந்தது” என்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு தருணங்கள் சரியாக அமையவில்லை எனவும் ஆரோன் பின்ச் கூறினார். “அவர்கள் துவக்கத்தில் நன்றாக விளையாடவில்லை. ஆண்ட்ரே ரசல் அவர் அணியின் மேட்ச் வின்னராக இருக்கிறார். ஆனால், அவர் பேட்டிங் ஆர்டரில் மிகவும் கீழேதான் பேட்டிங் செய்தார். இந்தத் தொடர் முழுவதும் அப்படித்தான் அமைந்தது. அவருக்குப் போதிய வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. அவர் போட்டியை மாற்றக்கூடிய திறனுடையவர் ஆனால் அவருக்குப் போதிய வாய்ப்புகள் அளிக்கவில்லை” என்றும் அவர் விமர்சித்தார்.

பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கடந்த ஆண்டு கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருவதை குறித்து ஆரோன் பின்ச் பேசினார்

“ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தபோது சிறப்பாகச் செயல்பட்டார். மிகச் சிறந்த தலைவராக இருந்த அவர், ஒரு கோப்பை வென்ற அணியை விட்டுச் செல்வது என்பது நிச்சயம் அவருக்குக் காயத்தை ஏற்படுத்தி இருக்கும். ஆனால், அந்த வெற்றியை மற்றொரு அணியில் சென்று பெறுவது அவரது திறமையை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

அது புதிய அணி, புதிய பயிற்சியாளர் ஆனாலும் அவர் தன்னை அதற்கேற்றாற்போல் மாற்றிக்கொண்டார். அவரது பேட்டிங், குறிப்பாக தனது சொந்த மைதானம் அல்லாத இடங்களில் உச்சகட்டமாக இருக்கிறது. அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மிக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஒரு வீரராகவும் கேப்டனாகவும் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார்” என்றார் ஆரோன் பின்ச்.

Previous articleரோகித், கோலியை அனுப்பி தப்பு செஞ்சுட்டோமோ? எந்தக் கோச்சும் செய்யாததைச் செய்யப் போகும் கம்பீர்
Next articleபஞ்சாப் புதிய வரலாறு..!