சிஎஸ்கே-வின் ‘பேபி’ படை,, மலிங்கா, ருதுராஜ், ஏபிடி-யின் வாரிசுகள் தோனி கையில்.. எப்படி சாத்தியம்?
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் தற்போது மூன்று ‘பேபி’ வீரர்கள் உள்ளனர். இதைச் சுட்டிக்காட்டி, தோனி எப்படி இது போன்ற வாரிசு வீரர்களைச் சரியாகத் தேர்வு செய்கிறார் என ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். யார் அந்த மூன்று ‘பேபி’ வீரர்கள் என்று பார்க்கலாம்.
1. பேபி மலிங்கா – மதீஷா பதிரானா:
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் லசித் மலிங்கா. தனது தனித்துவமான பந்து வீசும் முறையால் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தினார். அவரைப் போன்றே பந்து வீசும் மற்றொரு இலங்கை பந்துவீச்சாளரான மதீஷா பதிரானாவை, தோனி தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு, சிஎஸ்கே அணியில் இடம் பெறச் செய்தார். கடந்த சில சீசன்களாக சிஎஸ்கே அணியில் சிறப்பாக விளையாடி வரும் பதிரானாவை, ரசிகர்கள் செல்லமாக ‘பேபி மலிங்கா’ என்று அழைக்கின்றனர்.
2. பேபி ருதுராஜ் – ஷேக் ரஷீத்:
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆண்டு (2025) காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய நிலையில், அவரைப் போன்றே பேட்டிங் ஸ்டைல் கொண்ட ஆந்திர வீரர் ஷேக் ரஷீத்துக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்பட்டது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷேக் ரஷீத் விளையாடியதைப் பார்த்த ரசிகர்கள் வியந்து போனார்கள். பேட்டிங் செய்ய நிற்கும் விதம், சில ஷாட்கள் என அப்படியே ருதுராஜ் கெய்க்வாட்டைப் போலவே ஷேக் ரஷீத் இருந்தார். ருதுராஜ் மற்றும் ரஷீத் ஒரே மாதிரியாக பேட்டிங் செய்யும் வீடியோ ஒப்பீடுகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன. இதனால், பலரும் ஷேக் ரஷீத்தை ‘பேபி ருதுராஜ்’ என்று கூறத் தொடங்கினர்.
3. பேபி ஏபிடி – டெவால்ட் பிரெவிஸ்:
மூன்றாவதாக, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி வீரர் டெவால்ட் பிரெவிஸ், சமீபத்தில் சிஎஸ்கே அணியில் மாற்று வீரராகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஏபி டி வில்லியர்ஸ் எப்படி 360 டிகிரியிலும் பந்தை அடிப்பாரோ, அதே போலவே இவரும் மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் ஷாட்களை ஆடக் கூடியவர். இவரும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர் என்பதாலும், அதிரடியான பேட்டிங் ஸ்டைல் காரணமாகவும் இவரை ‘பேபி ஏபிடி’ என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். இவர் முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.
இதை அடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ‘பேபி மலிங்கா’, ‘பேபி ருதுராஜ்’ மற்றும் ‘பேபி ஏபிடி’ என மூன்று அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார் வீரர்கள் உள்ளதாக சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சிலாகித்து வருகின்றனர். தோனி, தலைசிறந்த வீரர்களைப் போன்றே விளையாடும் அடுத்த தலைமுறை வீரர்களைச் சரியாக அடையாளம் கண்டு, அவர்களை மெருகேற்றி, சரியான வாய்ப்புகளை வழங்கி வருகிறார் என ரசிகர்கள் தோனியின் திறமையைப் பாராட்டி வருகின்றனர்.