சிரித்து கொண்டே பேச வந்த கொயங்கா.. நிற்காமல் சென்ற கேஎல் ராகுல்.. அவமானப்பட்ட இடத்திலேயே பதிலடி!

சிரித்து கொண்டே பேச வந்த கொயங்கா.. நிற்காமல் சென்ற கேஎல் ராகுல்.. அவமானப்பட்ட இடத்திலேயே பதிலடி!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கேஎல் ராகுல் முக்கிய காரணமாக அமைந்தார். கடைசி வரை களத்தில் இருந்த கேஎல் ராகுல் 42 பந்துகளில் 57 ரன்களை விளாசினார். இதன்பின் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா அவரை கைகொடுத்து பாராட்ட வந்த போது, கேஎல் ராகுல் கைகுலுக்கிவிட்டு உடனடியாக அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

கடந்த ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி மோசமான தோல்வியை பெற்றது. அப்போது லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலை சுற்றி 100 கேமராக்கள் இருக்கும் போது, மைதானத்திலேயே வைத்து லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா கடுமையாக திட்டி தீர்த்தார். அவர் பேசிய வீடியோ ரசிகர்களையே அதிர்ச்சியடைய வைத்தது.

லக்னோ vs கேஎல் ராகுல்
இதன்பின் கேஎல் ராகுலுக்கு தனது வீட்டில் விருந்து வைத்து சமாதானம் செய்தாலும், அவர் லக்னோ அணியில் தொடர விரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ அணி ரூ.27 கோடி கொடுத்து ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் வாங்கியது. கேஎல் ராகுல் டெல்லி அணியால் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்டார். இதனால் லக்னோ அணிக்கு எதிராக கேஎல் ராகுல் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஹீரோவான கேஎல் ராகுல்
அதுவும் லக்னோ அணியின் சொந்த மண்ணில் நடக்கும் ஆட்டத்தில் கேஎல் ராகுல் எப்படி செயல்படுவார் என்று கவனிக்கப்பட்டது. அதற்கேற்ப கேஎல் ராகுல் கொஞ்சம் கூட அசராமல் 42 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து சிக்ஸ் அடித்து டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் மீண்டும் லக்னோவில் ஹீரோவாகினார் கேஎல் ராகுல். அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்களும் கேஎல் ராகுலை பாராட்டினர்.

கேஎல் ராகுலை சந்திக்க வந்த கொயங்கா
இந்த போட்டி முடிவடைந்த பின் கேஎல் ராகுல் அவசர அவசரமாக மைதானத்தில் இருந்து பெவிலியன் நோக்கி நடந்து சென்றார். அப்போது மைதானத்திற்குள் வந்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா மற்றும் அவரின் மகன் ஷஷ்வத் கொயங்கா இருவரும் கேஎல் ராகுலுடன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தனர்.

கேஎல் ராகுல் பதிலடி
ஆனால் கேஎல் ராகுல் கைகுலுக்கிய அடுத்த நொடியே அங்கிருந்து நகர்ந்து சென்றார். சஞ்சீவ் கொயங்கா ஏதோ சொல்வதற்காக வார்த்தைகளை சொல்ல வந்த போதும் கூட கேஎல் ராகுல் அங்கு நிற்கவில்லை. இதனால் எந்த இடத்தில் கேஎல் ராகுல் அவமானப்படுத்தப்பட்டாரோ, அதே இடத்தில் பதிலடி கொடுத்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அவமரியாதை
சில நாட்களுக்கு முன்பாக கேஎல் ராகுல் அளித்த பேட்டி ஒன்றில், உங்களுக்கு கோபத்தை வரவழைப்பது எது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கேஎல் ராகுல், அவமரியாதை என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தார். இதன் மூலமாக கேஎல் ராகுல் லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா மீது எவ்வளவு கோபத்தில் இருப்பார் என்று புரிந்து கொள்ள முடிவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Previous articleRevenge-ன்னா இப்படித் தான் இருக்கணும்!
Next articleடாஸ்-ஆல் தான் தோற்றோம்.. தோல்விக்கு காரணம் சொல்ல விரும்பவில்லை.. லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்