சூர்யகுமாரை நாங்கள் கேப்டன் ஆக்க காரணமே மற்ற வீரர்கள் சொன்ன விஷயம் தான்.. உண்மையை உடைத்த அகர்கர்

சூர்யகுமாரை நாங்கள் கேப்டன் ஆக்க காரணமே மற்ற வீரர்கள் சொன்ன விஷயம் தான்.. உண்மையை உடைத்த அகர்கர்

இந்திய டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவை நியமிக்க முக்கிய காரணம் என்ன என்பது பற்றி அஜித் அகர்கர் மற்றும் கவுதம் கம்பீர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் சக வீரர்கள் சொன்ன கருத்துக்களின் அடிப்படையில் தான் டி20 அணியின் கேப்டன் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறி இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு சூரியகுமார் யாதவ் வீரர்களின் ஆதரவை அதிக அளவில் பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று இரண்டாவது டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன் பின் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். இதற்கு அடுத்து இந்திய டி20 அணிக்கு அப்போதைய துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில், டி20 தொடரில் இந்திய அணியின் டி20 கேப்டனாக சூரியகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டார். ஹர்திக் பாண்டியாவுக்கு துணை கேப்டன் பதவி கூட அளிக்கப்படவில்லை. சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதை அடுத்து சூரியகுமார் யாதவ் எதற்காக இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அஜித் அகர்கர், “இந்திய அணிக்கு கேப்டனாகக் கூடிய தகுதி உடைய வீரர்களில் சூரியகுமார் யாதவும் ஒருவர். அதனால் தான் அவரை கேப்டனாக நியமித்தோம். அவர் சர்வதேச டி20யில் சிறந்த பேட்ஸ்மேன். கேப்டனாக இருக்கக் கூடியவர் தொடர்ந்து அனைத்து தொடர்களிலும் ஆடக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும். இடையே சில தொடர்களில் ஆடாமல் இருந்தால் அது சரியாக இருக்காது. ஹர்திக் பாண்டியா அந்த வகையில் தான் சரியாக இருக்க மாட்டார் என நினைத்தோம். அவரது உடற் தகுதி அவருக்கு சவாலாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம்.” என்றார்.

மேலும், “நாங்கள் இந்திய அணியின் சக வீரர்களிடம் இது குறித்து கருத்து கேட்டோம். அதன் அடிப்படையிலேயே சூரியகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.” என்றார் அஜித் அகர்கர். இந்த பதிலால் இந்திய அணியில் சூரியகுமார் யாதவுக்கு இளம் வீரர்கள் மத்தியில் அதிக மரியாதை இருப்பது தெரியவந்துள்ளது. அதே சமயம் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு இல்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Previous articleஇந்திய கிரிக்கெட்டுக்கு விரைவில் 3 அணிகள்? கம்பீர், அகார்கர் சொன்னதை கவனிச்சீங்களா?
Next articleவசீம் அக்ரம் மாதிரி இடதுகை வேகப்பந்துவீச்சாளர் வேண்டும்! முதல் வாய்ப்பே இவருக்கு தான்!கம்பீர் திட்டம்