ஜப்பான் கிரிக்கெட் சங்கத்துடன் இலங்கை கிரிக்கெட் சங்கம் ஒப்பந்தம்..!

ஜப்பான் கிரிக்கெட் சங்கத்துடன் இலங்கை கிரிக்கெட் சங்கம் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஜப்பானில் கிரிக்கெட் வளர்ச்சிக்காக வீரர்கள், அணிகள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆடுகள பாதுகாவலர்களை நாட்டுக்கு அனுப்ப உள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுவதற்காக அணிகளை நாட்டுக்கு அனுப்பவுள்ளதுடன், ஜப்பானிய அணிகளும் நாட்டுக்கு வந்து விளையாட வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

லங்கா பிரீமியர் லீக்கில் விளையாடும் அணிகளுடன் ஜப்பானிய வீரர்களுக்கும் பயிற்சியளிக்க வாய்ப்பு வழங்கப்படும் என கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நவோக்கி அலெக்ஸ் மியாஜி ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் கையெழுத்திட்டனர்.