ஐபிஎல் தொடரை விட அதிகம்! டி20 உலககோப்பை தொடருக்கான மொத்த பரிசுத் தொகையை அறிவித்த ஐசிசி
2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடருக்கான ஒட்டுமொத்த பரிசு தொகையையும் ஐசிசி அறிவித்திருக்கிறது. ஐசிசி தொடரை முதல் முறையாக அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உடன் இணைந்து நடத்துகிறது. 28 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.
கடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை போல வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் பரிசை கொடுக்காமல், ஒவ்வொரு போட்டியும் வெல்லும் அணிக்கு ஊக்கத்தொகையையும் ஐசிசி அறிவித்திருக்கிறது.
அதன்படி ஒட்டு மொத்தமாக 93 கோடி ரூபாய் பரிசு தொகையை ஐசிசி அறிவித்திருக்கிறது. இது ஐபிஎல் தொடரில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த பரிசு தொகையை விட இரு மடங்கு அதிகமாகும். ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாகவே 46 கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் இதற்கு 93 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றும் அணிக்கு 20 கோடியே 36 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. இறுதிப் போட்டி வரை வந்து ரன்னர் அப் ஆகும் அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 10 கோடியே 63 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது.
இதேபோன்று அரை இறுதி வரை வந்து தோல்வி அடைந்த இரண்டு அணிகளுக்கு தலா ஆறு கோடியே 54 லட்சம் இந்திய மதிப்பில் பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது. மேலும் சூப்பர் 8 சற்றுக்கு தகுதி பெரும் ஒவ்வொரு அணிக்கும் தலா மூன்று கோடியே 17 லட்சத்தி 94 ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது. மேலும் இந்த தொடரில் ஒன்பதாவது இடத்திலிருந்து 12வது இடம் வரை பிடிக்கும் அணிக்கு தலா 2 கோடியே 5 லட்சம் ரூபாய் பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று 13 வது இடத்தில் இருந்து 20 வது இடம் பிடிக்கும் அணிக்கு தலா ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. இது மட்டுமல்லாமல் அரை இறுதிப் போட்டியை தவிர மற்ற சுற்றில் ஒரு போட்டியை வென்றால் 25 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையும் அனைத்து அணிகளுக்கும் தனியாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் சிறிய சிறிய அணிகள் மற்றும் அதன் கிரிக்கெட் வாரியங்கள் உதவி பெறும் வகையில் ஐசிசி இந்த முடிவை அறிவித்திருக்கிறது.