டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா.. எந்தெந்த அணியுடன் எப்போது ஆட்டம்?

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா.. எந்தெந்த அணியுடன் எப்போது ஆட்டம்?

டி20 உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 8 சுற்றில் விளையாடும் அணிகள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைகின்றன. ஏற்கனவே சூப்பர் 8 சுற்றில் விளையாடும் 8 அணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா, அமெரிக்கா அணிகளும், குரூப் பி பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும், குரூப் சி சுற்றில் இருந்து ஆஃப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் டி சுற்றில் இருந்து தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் அணிகளும் முன்னேறியுள்ளன.

இந்த நிலையில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நாளை மறுநாள் முதல் தொடங்கவுள்ளது. சூப்பர் 8 சுற்றும் 2 பிரிவுகளாக பிரித்து நடக்கவுள்ளன. அதன்படி குரூப் 1ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் உள்ளன. அதேபோல் குரூப் 2ல் அமெரிக்கா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் ஒரு போட்டியில் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஜூன் 20ஆம் தேதியன்று ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி பார்படாஸில் உள்ள பிரபல கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளது. அதேபோல் ஜூன் 22ல் நடக்கும் போட்டியில் வங்கதேசம் அணியை இந்திய அணி எதிர்க்கவுள்ளது. இந்த போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நடக்கவுள்ளது.

பின்னர் கடைசியாக வலிமையான அணியாக கருதப்படும் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி செண்ட் லூசியா மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்றாலே இந்திய அணியால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் விளையாடி இருப்பதால், இந்திய அணிக்கு சிறிது பின்னடைவாக அமைந்துள்ளது.