தென் ஆபிரிக்காவின் கோட்டையை உடைத்த இந்தியா..!! சென்சூரியன் டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை..!

தென் ஆபிரிக்காவின் கோட்டையை உடைத்த இந்தியா..!!
சென்சூரியன் டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை..!

தென் ஆப்பிரிக்காவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேகொண்டுள்ள இந்திய அணிக்கும், தென் ஆப்பிரிக்க அணிக்கும் இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் வரலாற்று வெற்றியைப் பெற்று இந்தியா சாதானை படைத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவின் கோட்டையாக கருதப்பட்ட சென்சூரியன் மைதானத்தில் இந்திய அணி வெற்றி கொடியை நாட்டியது.

இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் தவிர தென்னாப்பிரிக்கா வேறு எந்த அணிகளிடமும் தோல்வியை தழுவியது கிடையாது.

இதுவரை சென்சூரியன் மைதானத்தில் 26 டெஸ்ட்களில் தென்னாப்பிரிக்கா விளையாடியுள்ளதுடன் 2 டெஸ்ட்களில் மட்டும் அந்த அணி தோல்வியை தழுவியது. 3 போட்டி Draw செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 305 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. 5வது நாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 94 ரன்கள் என்ற ஸ்கோருடன் தொடர்ந்தது. இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சால் , தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களில் சுருண்டதுடன் தோல்வியை தழுவியது.

சென்சூரியன் மைதானத்தில் 9 நாடுகள் ஒரு டெஸ்ட் போட்டியாவது இங்கு விளையாடி இருக்கிறது. அதில் இந்தியாவை தவிர எந்த ஒரு ஆசிய அணியும் சென்சூரியனில் டெஸ்ட் போட்டியை வென்றது இல்லை. அசாரூதீன், டிராவிட், தோனி தலைமையிலான இந்திய அணி செய்யாத சாதனையை இப்போது விராட் கோலி செய்து காட்டியுள்ளார்.

2014ஆம் ஆண்டில் தான் ஆஸ்திரேலிய அணி சென்சூரியனில் வெற்றியை ருசித்தது. அதன் பிறகு வேறு எந்த அணியும் செய்யாத சாதனையை இந்தியா செய்துள்ளது. இதற்கு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களும், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு மட்டுமே காரணம். விராட் கோலி தைரியமாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததே வெற்றிக்கு காரணம் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பிரிஸ்பேனில் அவுஸ்திரேலியாவையும், லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தையும், சென்சூரியன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த முடியாது எனவும் அது அவர்களது கோட்டை எனவும் பேசப்பட்ட காலம் கடந்து, இப்போது கோலி அணியால் அந்த கோட்டைகள் தகர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.