பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் சுற்றுலா இலங்கை அணி 192 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை இன்று (3) பதிவு செய்து 2-0 என்ற கணக்கில் தொடர் வெற்றியை இலங்கை பதிவு செய்துள்ளது.
போட்டியின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்கும் போது, 511 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற மாபெரும் இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 268 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பின்னர் அவர்கள் அனைவரும் 318 ஓட்டங்கள் எடுத்தனர்.
இந்தப் தொடரில் 200 கடந்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ் இன்னிங்ஸ் சார்பாக மொமினுல் ஹக் 50 ஓட்டங்களையும், ஹசன் மிராஸ் ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களையும் பெற்றனர். லிட்டன் தாஸ் 38 , ஷகிப் அல் ஹசன் 36 பெற்று ஆட்டமிழந்தனர்.
இன்றைய முதல் விக்கெட் அல்லது இன்னிங்ஸின் 8வது விக்கெட்டாக தைஜுல் இஸ்லாம் 14 ஓட்டங்களுக்கு கமிது மெண்டிஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹசன் மஹ்மூத் 6, கலீத் அஹமட் 2 ஓட்டங்களை பெற்ற நிலையில் விக்கெட்டுகளை லஹிரு குமார வீழ்த்தினார்.
பந்துவீச்சில் லஹிரு குமார 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், கமிது மெண்டிஸ் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். பிரபாத் ஜெயசூர்யா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சிட்டகாங்கில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 531 எடுத்தது, பதிலுக்கு வங்கதேசம் 178 மட்டுமே எடுத்தது.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்கள் எடுத்திருந்த போது இன்னிங்ஸை இடைநிறுத்த முடிவு செய்தது.
போட்டியின் ஆட்ட நாயகனாகவும், போட்டி தொடரின் நாயகனாகவும் கமிந்து மெண்டிஸ் தெரிவானார்.
இந்த போட்டியுடன் இலங்கை அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கையும், ஒருநாள் தொடரை வங்கதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.