தோனியிடம் குசும்பு வேலை செய்த தீபக் சாஹர்.. தோனி பேட்டால் அடித்த காரணமே இதுதான்.. என்ன நடந்தது?
2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் முடிவில் தோனி தீபக் சாஹரை பேட்டால் செல்லமாக அடித்தார். தீபக் சாஹர் இதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த முறை அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
அதனால், தனது அணி வீரர் மும்பை அணிக்காக ஆடுவதால் இப்படி தோனி அவரை செல்லமாக அடித்ததாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால், உண்மையில் நடந்தது வேறு. தீபக் சாஹர் தோனி பேட்டிங் செய்ய வந்தபோது அவரை சீண்டி இருந்தார். அதற்காகவே தோனி அவரை திருப்பி செல்லமாக அடித்து இருக்கிறார்.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த இலக்கை சேஸிங் செய்தது. அப்போது வெற்றிக்கு 8 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி களத்திற்கு வந்தார்.
எப்படியும் சிஎஸ்கே அணி வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் தீபக் சாஹர் தோனி அருகே வந்து அவரை சீண்டும் வகையில் ஏதோ பேசினார். அது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியானது.
அதன் காரணமாகவே போட்டி முடிந்தவுடன் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் வரிசையாக வெளியேறிய போது தோனி காத்திருந்து தீபக் சாஹரை பேட்டால் அடித்தார். இதுகுறித்து சிஎஸ்கே அணி ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தீபக் சாஹருக்கு சிஎஸ்கே அணியை விட்டு செல்ல மனமில்லை என்றும், அவர் தோனியின் செல்லப் பிள்ளையாக இருந்தார் என்பதற்கான பல்வேறு தருணங்களையும் அவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்தப் போட்டியில் தோனி ஒரு ரன் கூட எடுக்கவில்லை. வெற்றிக்கான ரன்களை ரச்சின் ரவீந்திரா எடுத்தார். அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
செய்தி சுருக்கம்:
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டி முடிந்ததும் தோனி, தீபக் சாஹரை பேட்டால் செல்லமாக அடித்தார்.
தீபக் சாஹர் தோனியை சீண்டியதால் தான் தோனி அப்படி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி களமிறங்கியபோது தீபக் சாஹர் அவரை கிண்டல் செய்துள்ளார்.
தோனி மற்றும் தீபக் சாஹர் இடையேயான இந்த கலகலப்பான தருணம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தீபக் சாஹர் முன்பு சிஎஸ்கே அணியில் இருந்தபோது தோனியுடன் நெருக்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







