தோனியின் அட்வைஸை ரிஷப் பந்துக்கு கூறிய கோலி

தோனியின் அட்வைஸை ரிஷப் பந்துக்கு கூறிய கோலி

இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான ஆரம்பத்திலேயே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அபாரமாக ஆடி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் ரிஷப் பந்த். இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார் ரிஷப் பந்த்.

ஆனால் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. அவரது அதிரடியான பேட்டிங் தான் அவரது பலம். ஆனால் அதுவே அவரது பலவீனமாகவும் மாறியுள்ளது. ஏனெனில் சில சமயங்களில் அவரது இயல்பான ஆட்டத்தை ஆடுவதா அல்லது அணியின் சூழலை கருத்தில்கொண்டு ஆடுவதா என்று தெரியாமல் இரட்டை மனநிலையில் ஆடி அவுட்டாகிவிடுகிறார்.

ரிஷப் பண்ட் அவரது கடைசி 13 இன்னிங்ஸ்களில் வெறும் 250 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரிலும் மோசமாக ஆடிவருகிறார். இதனால் கவாஸ்கர், கம்பீர் ஆகிய முன்னாள் ஜாம்பவான்கள் ரிஷப்பை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, “ஒரு பேட்ஸ்மேன் செய்யும் தவறு, மற்றவர்களை விட அவருக்குத்தான் நன்கு தெரியும். அந்த குறிப்பிட்ட சூழலில் அவர் ஏன் அப்படி ஆடினார் என்பதை அவரவர் உணர்ந்தால் மட்டுமே வளர முடியும். அனைவருமே அவர்களது கெரியரில் தவறு செய்வார்கள். அதை அவரே உணர்ந்துதான் மேம்பட வேண்டும்.

எனக்கு தோனி கூறிய அறிவுரை நன்றாக நினைவிருக்கிறது. அதாவது, செய்த தவறை மீண்டும் செய்வதற்கிடையில் குறைந்தது 6-7 மாதங்கள் இடைவெளி இருக்க வேண்டும். அதற்கிடையே, செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது. அப்படி செய்தால்தான் சர்வதேச கெரியரில் வளரமுடியும் என்று என்னிடம் தோனி கூறினார்.

என் கிரிக்கெட் கெரியரில் தோனியின் அந்த அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதைத்தான் ரிஷப் பின்பற்ற வேண்டும். செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அதை திரும்ப செய்யாமல் இருந்து வளர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Abdh.