தோனி எனும் மக்கள் சாம்ராஜ்யத்தின் அரசன் ❤️

இந்திய கிரிக்கெட் பெரும் நகரங்களை மையமாக கொண்டு தான் இயங்கியது. தற்போதும் இயங்குகிறது. இந்த நகரங்களில் இருந்து வரும் ஆட்கள் மீது பொதுவாகவே மீடியா வெளிச்சம் அதிகமாக இருக்கும். சிறு வயதில் இருந்தே அவர்களின் சாதனைகள் செய்தியாக்கப்படும், அவர்கள் அணிக்குள் வந்த காரணங்கள் நியாயமாக்கப்படும். ஆனால் இது மற்ற எல்லா ஆட்களுக்கும் கிடைக்கிறதா என்றால் கிடைக்காது. யஸ்பால் சிங், ப்ரகாஸ் தோஸ்ரா போன்றோரெல்லாம் குட்டி உதாரணங்கள். இதை எல்லாம் கடந்து எதிர்நீச்சல் போட்டு வந்த கபில் தேவ் கூட உலகக்கோப்பை வென்று இரண்டு தொடர்கள் கழித்து கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதே வரலாறு.

தோனியின் வாழ்க்கையும் இப்படி தான் இருந்திருக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் சிஸ்டம் அவரை அப்படித் தான் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் தோனி சிஸ்டத்திற்குள் வந்தவுடனே நான் இவர்களில் ஒருவன் இல்லை… வேறு ஆள் என்பதைக் காட்ட ஆரம்பித்தார். கீப்பிங், பேட்டிங் என எல்லாமே வழமைக்கு மாறாக இருந்தது. கீப்பருக்கான தேவை, கேப்டனுக்கான தேவை என இரண்டும் காலப்போக்கில் தோனியை மெதுவாக இந்திய கிரிக்கெட்டின் மேலே ஏற்றியது. தோனி நாயகனானார்.

கேப்டன் பதவி, நல்ல பேட்டிங், கீப்பிங் மற்றும் இருந்துவிட்டால் இந்திய கிரிக்கெட்டின் உயரத்திலேயே இருந்து விடலாம் என்பதெல்லாம் கிடையாது. பிசிசிஐ யாரை எப்படி வேண்டுமானாலும் பந்தாடும். நல்ல உதாரணம் கோலி.இந்த நிலையில் தான் IPL அறிமுகமாகியது. Knowledgeable crowd எனப்பட்ட மெட்ராஸ் பெயரில் ஒரு அணி அறிமுகமாக தோனி அதில் இணைகிறார். சென்னையும் வரிசையாக இறுதிப்போட்டி, சேம்பியன் என அசத்த தோனி இந்திய முழுக்க பிரபலமாகிறார். உலகக்கோப்பையும் வெல்கிறார். இதுவரை நடந்தது எல்லாம் சாதாரணம் தான். தன்னை இதன் பிறகு எப்படி தோனி தக்கவைத்துக் கொண்டார் என்பதில் அடங்கியிருக்கிறது தோனியின் தனித்தன்மை.

ரஜினி ஒரு முறை ஒரு கதை சொல்வார். ஒரு நாட்டில் ஐந்து வருடம் ராஜாவாக இருந்த பின்பு கொடிய மிருகங்கள் வாழும் ஆளில்லாத தீவில் கொண்டு போய் விட்டுவிடுவார்களாம். ஆனால் ஒரு ராஜா மட்டும் பதவியில் இருக்கும் போதே அந்தக் காட்டை அழித்து அதில் மாளிகை கட்டி பதவிக்காலம் முடிந்த பின்பும் மாளிகையில் அரசனாகவே வாழ்ந்தானாம். தோனியின் கதையும் இது தான். தனது மகுடத்திற்கு பாதிப்பு வராமல் இருக்க களத்திலும் சரி.. களத்திற்கு வெளியேயும் சரி… என்னெல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாம் செய்தார். இந்தியக் கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த சீனிவாசன் தோனியுடன் இருந்தார். தோனியால் யாரை வேண்டுமானாலும் அணிக்கு கொண்டு வர முடியும். நீக்க முடியும். அவர் கொண்டு வந்த ஆட்களால் கோப்பையை வெல்லவும் முடியும். 8-0 என வெளிநாடுகளில் whitewash ஆனால் கூட அவரது கேப்டன் பதவியை பறிக்காமல் இருந்தது சீனிவாசனும் பிசிசிஐ அமைப்பும். கைமாறாக முழுவதுமாக முதன் முதல்லி சாம்பியன்ஸ் டிராபி வென்று தந்தார் தோனி.

சென்னை அணியின் சந்தை மதிப்பு தோனியால் பெரிய உயரத்துக்கு போய்க்கொண்டே இருந்தது. இந்திய அணி டெஸ்ட்டில் தோற்றாலும் ஏதோ ஒரு பெரிய கோப்பையை வென்று வாய் மூட வைக்கும் வித்தை தோனிக்கு தெரிந்திருந்தது. தொட்டதெல்லாம் அவருக்கு துலங்கியது. ஒரு முறை ஆஸ்திரேலியாவில் சேவாகை 46,48,50 என வரிசையாக டெத் ஓவர் போட வைத்து விக்கெட் எடுப்பார் தோனி. இப்படி கை வைத்த பொருளை எல்லாம் தங்கமாக்கும் தன்மை, பெரிய ரசிகப்படை, என தோனி இருக்க தோனியிடம் இருந்து ரன் வரவில்லை என்றாலும் தோனியை யாரும் கேள்வி கேட்க முடியாது. கேள்வி எழுந்தாலும் ஏதோ ஒன்றை செய்து தோனி சென்னையை playoffs அழைத்து வந்து விடுவார். சூதாட்ட புகார் பற்றி எரிந்த போது கூட அவர் கொஞ்சமும் அதில் சிக்காமல் சீனிவாசன் பார்த்துக்கொண்டார்.

பிசிசிஐ தலைவரிடம் இருந்து இப்படி ஒரு நம்பிக்கையை பெறுவது சாதாரணமில்லை. கிட்டத்தட்ட ஒரு business ஒப்பந்தம் மாதிரி தான் இது. அணித் தேர்வு, கேப்டன் பதவிக்கு எனக்கு சிக்கல் வரக்கூடாது. மாறாக நான் உனக்கு தேவையான வெற்றிகளையும் சந்தை மதிப்பையும் பெற்றுத் தருகிறேன். இது தான் அந்த ஒப்பந்தம். தோனி உருவாக்கிய தளபதி கோலியை அவருக்கு பின் கோப்டனாக்கி கடைசி வரை unofficial ராஜாவாகவே அணியில் இருந்தார் தோனி.

கடைசி கட்டத்தில் கூட தோனிக்கு ஓய்வு அளித்திருக்கிறோம் என்று தான் பிசிசிஐ-யால் கூற முடிந்ததே தவிர அவரை அணியில் இருந்து நீக்கி விட்டோம் என்று கூற முடியவில்லை. இது தான் தோனியின் ராஜ்யம். அவருக்கு அவரே உருவாக்கிக்கொண்ட சாம்ராஜ்ஜியம். களத்திற்குள் ரசிகர்களின் அன்பு சாம்ராஜ்ஜியம் என்றால் களத்திற்கு வெளியே கைதேர்ந்த அரசியல் சாம்ராஜ்ஜியம்.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு தோனி மிகப்பெரிய உதாரணம். தோனி சிஸ்டத்திற்குள் வந்து புதியதாக தனக்கென தனி சிஸ்டத்தையே உருவாக்கியவர். சச்சின், கோலி போன்ற பேட்டிங் ஜாம்பவான்கள் இருந்த போதே அவர்களை விட ரசிகர் செல்வாக்கில் ஒரு படி மேலே இருந்தவர். தோனி உருவாக்கிய இந்த சிஸ்டத்தை பிசிசிஐ அதன் பின் வந்த கோலியை பின்பற்ற அனுமதிக்கவில்லை. எல்லாரும் தோனி ஆகிவிட முடியாது என்பதற்காக அல்ல. எல்லாரும் தோனி ஆகிவிடக் கூடாது என்பதற்காக. விக்ரம் பட சந்தனம் தனக்கான கவர்மென்ட்டை உருவாக்க நினைத்தார். ஆனால் தோனி அதை செய்து காட்டினார்.

பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி ❤

#wilson HBk