தோனி கற்றுக் கொடுத்த பாடம் அது.. என் பந்தில் பேட்ஸ்மேன்களால் ஸ்வீப் அடிக்க முடியாது.. தீக்சனா!
ஸ்பின்னர்களை ஸ்வீப் ஷாட் மூலமாக அச்சுறுத்தும் பேட்ஸ்மேன்களுக்கு எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்று தோனி கற்றுக் கொடுத்ததாக இலங்கை ஸ்பின்னர் தீக்சனா தெரிவித்துள்ளார். அதேபோல் பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் பவுலிங் செய்ய வாய்ப்பு கொடுத்து மன உறுதி அதிகரித்ததற்கும் தோனியே காரணம் என்று கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி விளையாட தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே டி20 உலகக்கோப்பையில் குரூப் சுற்றுடன் வெளியேறியதால், சொந்த மண்ணில் நடக்கும் டி20 தொடரில் வெற்றிபெற வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே இடைக்கால பயிற்சியாளராக ஜெயசூர்யா வந்திருப்பது அந்நாட்டு வீரர்களிடையே உற்சாகத்தை அளித்துள்ளது.
அதேபோல் தீக்சனா, ஹசரங்கா, பதிரானா உள்ளிட்ட வீரர்கள் இந்திய அணிக்கு சவாலாக இருப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது ஸ்வீப் ஷாட்களை கட்டுப்படுத்த இந்திய ஜாம்பவான் தோனி திட்டம் போட்டு கொடுத்ததாக இலங்கை பவுலர் தீக்சனா கூறியுள்ளார்.
அதில், சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது தோனியிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன். குறிப்பாக பேட்ஸ்மேன்கள் எனது பவுலிங்கில் ஸ்வீப் ஷாட்களை அடிக்கும் போது, எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். எனது பவுலிங் ஆக்ஷன் மூலமாக கூடுதல் வேகத்தில் பந்துகளை வீச முடியும். அப்படி செய்த போதும், பவுண்டரிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
அப்போது தோனி என்னிடம் ஃபுல்லர் லெந்தில் பவுலிங் செய்யுமாறு அறிவுறுத்தினார். அதன் மூலமாக யார்க்கர் பந்துகளை வீச கற்றுக் கொண்டேன். டெத் ஓவர்களில் பவுலிங் செய்த போது, எனது மன உறுதி அதிகரித்தது. தோனியிடம் எப்போதும் ஒரு திட்டம் இருக்கும். எப்போதும் முதலில் பவுலர்களின் திட்டத்தை செயல்படுத்த அனுமதிப்பார். ஒருவேளை அது சரியாக செயல்படவில்லை என்றால், அவர் ஒரு திட்டத்தை கூறுவார்.
தோனி விக்கெட் கீப்பிங் செய்யும் போது நமது பணி நிச்சயம் குறையும் என்று தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக இதுவரை 27 போட்டிகளில் விளையாடியுள்ள தீக்சனா 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பவர் பிளே ஓவர்களில் தீக்சனா பவுலிங் செய்யும் போது, எந்த பேட்ஸ்மேனையும் தடுமாற வைக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் இவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.