“தோனி மட்டும் அவுட் ஆகலைனா”.. சிஎஸ்கே-வை கிழித்து தொங்கவிட்ட சேவாக்.. சரமாரி விமர்சனம்
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வெறும் 103 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் தோனிக்கு நடுவர் தவறாக அவுட் கொடுத்து விட்டதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ள நிலையில், முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் தோனியையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
தோனி மட்டும் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் போட்டியில் சிஎஸ்கே 130 ரன்கள் எடுத்திருக்கும் என்றும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்னும் அரை மணி நேரம் கழித்து வெற்றி பெற்றிருக்கும் என்றும் கிண்டல் செய்து கடும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
இந்தப் போட்டியில் தோனி நான்கு பந்துகளில் ஒரு ரன் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அது குறித்து ஒரு சர்ச்சை எழுந்தது. தோனி பந்து பேட்டில் பட்டதாக அம்பயரிடம் சொன்னார், ஆனால், களத்தில் இருந்த நடுவர் அவுட் என அறிவித்து விட்டார்.
பின்னர் அதை தோனி ரிவ்யூ செய்தார். ரிவ்யூவிலும் பந்து பேட்டில் பட்டதாக அல்ட்ரா எட்ஜில் சிறிய அதிர்வு இருந்தது. ஆனால் வீடியோவில் பார்க்கும் போது பந்துக்கும் பேட்டுக்கும் இடையே இடைவெளி இருப்பது போல இருந்தது. அதனால் மூன்றாவது நடுவர் இது அவுட் தான் என அறிவித்தார்.
இந்த நிலையில் தான் தோனி மட்டும் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் சிஎஸ்கே பெரிய ஸ்கோரை எடுத்திருக்கும் என ரசிகர்கள் கூறி வந்தனர். அது குறித்து போட்டிக்கு பிறகு வீரேந்தர் சேவாக் பேசுகையில் இந்த விமர்சனத்தை முன் வைத்தார்.
சேவாக் பேசுகையில், “தோனி ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் பெரிய மாற்றம் எதுவும் நடந்திருக்காது. சிஎஸ்கே அணி 130 ரன்கள் எடுத்திருக்கும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 103 ரன்கள் என்ற இலக்கை 10.1 ஓவரில் எட்டிய நிலையில், 130 ரன்களை இன்னும் சில ஓவர்களில் எட்டி இருக்கும். நாம் 11 மணிக்கு இது குறித்து பேசிக் கொண்டிருப்பதற்கு பதிலாக 11:30 க்கு இது பற்றி பேசிக் கொண்டு இருந்திருப்போம்” என கூறினார்.